தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வு.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வு இன்று நடைபெறுவதையொட்டி கலெக்டர் விஷ்ணு, நேரில் சென்று ஆய்வு செய்தார்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளியில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வானையம் நடத்தும் குரூப்-4 தேர்வு நடைபெற்று வருவதை கலெக்டர் விஷ்ணு நேரில் சென்று பார்வையிட்டு இன்று (24.07.2022) ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது கலெக்டர் விஷ்ணு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வானையம் நடத்தும் குரூப்-4 தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி மாவட்டதை பொறுத்தவரை திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மானூர், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, நாங்குனேரி, திசையன்விளை மற்றும் ராதாபுரம் ஆகிய 8 வட்டங்களில் உள்ள 191 இடங்களில் அமைந்துள்ள 230 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்று வருகிறது. இத்தேர்வு சம்பந்தமான அனைத்து நடவடிக்கைகளை கண்காணித்திட ஒவ்வொரு வட்டத்திற்கும் தலா ஒரு துணை ஆட்சியர் வீதம் எட்டு வட்டங்களுக்கு 8 துணை ஆட்சியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.
மேற்படி தேர்வினை எழுதுவோர்களை கண்காணிப்பதற்கு, 230 ஆய்வு அலுவலர்களும், 11 பறக்கும் படை அலுவலர்களும், தேர்வுக்குரிய பணிகள் மேற்கொள்ள வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர் நிலையில் 59 சுற்றுக்குழு அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் தேர்வின் நடவடிக்கைகளை பதிவு செய்திடும் பொருட்டு 238 வீடீயோ கிராபர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான முழு ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி.மாவட்டத்தில் நெல்லை நீர்வளம் சார்பில், தூய பொருநை நெல்லைக்கு பெருமை என்ற தலைப்பில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் 1200 நீர்நிலைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக தாமிரபரணி ஆற்றங்கரையோரம் நடக்கும் திருவிழா, முக்கிய நிகழ்வுகளில் பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை செய்யப்பட்டள்ளது. ஆடி அமாவாசை சொரிமுத்து அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடுப்பதற்காக சார் ஆட்சியர் மற்றும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் துணை இயக்குநர் ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறை, வனத்துறை, காவல்துறையினர் ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். ஏற்கனவே சோதனைச்சாவடி அமைக்கப்பட்டிருந்தாலும். கூடுதலாக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு வனத்துறை, காவல்துறையினர் ஆகியோர் சோதனை பணியில் ஈடுபடவுள்ளனர். எனவே ஆடி அமாவாசை சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு வரும் பக்தர்கள், பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகளை கொண்டு வரவேண்டும். பக்தர்கள், பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாமல் துணி பைகளை பயன்படுத்தி மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என தெரிவித்தனர்.
இந்த ஆய்வின் போது திருநெல்வேலி மாநகர துணை ஆணையர் சீனிவாசன், திருநெல்வேலி ஆர்டிஓ சந்திரசேகர், பாளையங்கோட்டைதாசில்தார் ஆவுடையப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.
.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu