ஆவின் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்ய திட்டம்-அமைச்சர் தகவல்.
பால்வளத்துறை அமைச்சர் சா.மு நாசர்
ஆவின் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக,நெல்லையில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆவின் பார்லர்கள் மற்றும் ஆவின் உற்பத்தி நிலையத்தை ஆய்வு மேற்கொள்ள வருகை தந்த பால்வளத்துறை அமைச்சர் சா.மு நாசர் நெல்லை வந்தார். இங்கு நீதிமன்றம் எதிரே உள்ள ஆவின் பார்லர், டவுண் ஆவின் பார்லர் மற்றும் மேலப்பாளையம் அரசு பொறியியல் கல்லூரி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள பார்லர்களையும் ஆய்வு செய்தார்.
அங்கு விற்பனை விபரம் ,வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் விலை ஆகியவற்றை முகவர்களிடம் கேட்டறிந்தார் . பின்னர் ரெட்டியார்பட்டியில் உள்ள ஆவின் உற்பத்தி நிலையம், பால் பாக்கெட்டுகள் தயார் செய்யும் இடம், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயார் செய்யும் இடங்கள் ஆகியவற்றையும் நேரில் பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் ஊரடங்கு காலத்தில் தேவையான அத்தியாவசிய பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்க்க தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி தமிழகம் முழுவதும் ஆய்வு பணிகள், களப்பணிகளை செய்து பந்தய குதிரை வேகத்தில் செயல்பட்டு வருவதாகவும், இதன்மூலம் கொரோனா நோயை ஒழித்திடும் முயற்சியில் தமிழக முதல்வர் வெற்றி கண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை கண்டு அனைத்து மாநிலங்களும் பாராட்டி வருவதாக தெரிவித்த அவர் ஊரடங்கு காலத்தில் மிகவும் அத்தியாவசிய தேவையான பால் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களிடமிருந்து சரியான முறையில் பெறப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்வது குறித்து தமிழகம் முழுவதும் ஆய்வு பணிகள் நடந்து வருகிறது.
தமிழக முதலமைச்சர் உத்தரவின் பெயரில் ஆவின் பால் விலை ரூபாய் மூன்று குறைக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.மேலும் குறைக்கப்பட்ட விலையைவிட கூடுதலான விலையில் விற்பனை செய்த சென்னையில் உள்ள 11 கடைகளும் தஞ்சாவூரில் உள்ள இரண்டு கடைகளும் சீல் வைக்கப்பட்டு உள்ளது. ஆவின் நிறுவனம் தற்போது லாபகரமாக இயங்கி வருகிறது.ஆவின் பால் லிட்டருக்கு ரூபாய் மூன்று விலை குறைக்கப்பட்டதால் 270 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது அந்த இழப்பை சரி செய்யும் விதமாக உற்பத்தியை கூட்ட திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. என்று தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu