நெல்லையில் 14 ஆண்டுகள் தண்டனை முடிந்த கைதிகள் விடுதலை; எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை
பைல் படம்.
அதிகபட்சம் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடித்த கைதிகளை ஆளுநரின் ஒப்புதலின்றி மாநிலங்களே விடுதலை செய்யலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை விரைந்து செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறையில் அதிகபட்சமாக 14 ஆண்டுகள் தண்டனை காலம் முடிந்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிப்பதற்கு ஆளுநர் ஒப்புதல் அவசியமில்லை என்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி (சிஆா்பிசி) அவர்களை விடுவிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் இதுதொடர்பான வழக்கு ஒன்றில் தெரிவித்துள்ளது.
தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க ஆளுநர் ஒப்புதல் அவசியமில்லை என ஹரியானா அரசு கடந்த 2008ல் கொள்கை திட்டத்தை கொண்டு வந்தது. இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணையில் தான் சிறையில் 14 ஆண்டுகள் தண்டனைக் காலம் முடிந்த ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதேவேளையில், 14 ஆண்டுகள் தண்டனை முடிக்காத கைதிகளை விடுவிக்க அரசியலமைப்பு சட்டம் 161வது பிரிவின்படி ஆளுநருக்குத்தான் அதிகாரம் உள்ளது என்றும், இதில் ஆளுநர் மாநில அரசின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் கொண்ட அமர்வு தனது உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளனர்.
மேலும் அந்த உத்தரவில், சிறையில் தண்டனை பெறும் அனைத்துக் கைதிகளுக்கும் இந்த திட்டத்தை பாகுபாடில்லாமல் அமல்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
ஆகவே, 28 ஆண்டுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் 7 தமிழர்கள் உட்பட 14 ஆண்டுகள் சிறைவாசம் கழித்த முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் உள்ளிட்ட அனைத்து சிறைவாசிகளையும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பாரபட்சம் பாராமல் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்.
உச்ச நீதிமன்ற உத்தரவு மூலம் இவர்களின் விடுதலையில் ஆளுநர் தலையீடோ அல்லது வேறு சட்ட சிக்கலோ இனி இருக்காது என்பதால், தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் விடுதலை நடவடிக்கையை துவக்க வேண்டும். மேலும் 10 ஆண்டு சிறைத் தண்டனை கழித்த அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் அரசியலமைப்பு சட்டம் 161வது பிரிவின்படி விடுதலை செய்யவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu