திருநெல்வேலியில் விமர்சையாக நடைபெற்ற மாம்பழ சங்க திருவிழா
பாளையங்கோட்டை மாம்பழ சங்க திருவிழாவில் கலந்து கொண்ட கிறிஸ்தவர்கள் ஏழை, எளியோருக்கு தங்களால் இயன்ற பொருட்களை தானமாக வழங்கினர்.
நெல்லை பாளையங்கோட்டையில் மாம்பழ சங்க திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட கிறிஸ்தவர்கள் ஏழை, எளியோருக்கு தங்களால் இயன்ற பொருட்களை தானமாக வழங்கினர்.
1820 ஆண்டுகளில் நெல்லை மாவட்ட சுற்று வட்டார கிராமங்களில் கிறிஸ்துவ சபைகள் வேகமாக அமைக்கப்பட்ட காலத்தில், ஜூலை மாதத்தில் தூத்துக்குடி மாவட்டம் குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் நடைபெறும் பத்து நாள் விழாவில் கிறிஸ்தவ சபை மக்களும் கலந்து வந்தனர். இதனை மாற்றும் வகையில் மாம்பழத் திருவிழா நெல்லை பாளையங்கோட்டையில் துவக்கப்பட்டது.
அதன்படி இந்த ஆண்டும் நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டலம் சார்பில் மாம்பழ சங்கம் மற்றும் ஸ்தோத்திர பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மாம்பழ சங்கம் மற்றும் 242-வது ஸ்தோத்திர பண்டிகை நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று மாலையில் பாளையங்கோட்டை மிலிட்டரி லைன் ஆலய வளாகத்தில் அருட்தொண்டர்களின் தியாக நினைவு ஸ்தோத்திர ஆராதனை நடந்தது.
இதைத்தொடர்ந்து பாளையங்கோட்டை மிலிட்டரி லைன் குளோரிந்தாள் ஆலயத்தில் உள்ள மிஷினரிகளின் கல்லறைகளில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் கிறிஸ்தவர்களின் பவனி நடந்தது. இதனைத் தொடர்ந்து இன்று காலை நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள நூற்றாண்டு மண்டபத்தில் 242 வது ஸ்தோத்திர பண்டிகை மற்றும் மாம்பழ சங்க விழா சிறப்பு ஆராதனையுடன் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பாளையங்கோட்டை திருமண்டல பேராயர் பர்ணபாஸ் கலந்து கொண்டு ஆராதனை நிகழ்ச்சிகளை செய்து வைத்தார்.இதனை தொடர்ந்து இந்த பண்டிகையின் முக்கிய நிகழ்வாக பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த கிறிஸ்தவர்கள் ஆண்டு முழுவதும் தங்களது உழைப்பால் கிடைத்த வருமானத்தின் ஒரு பங்கை ஏழை எளிய மக்களுக்கு தானமாக வழங்கினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu