கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப் போட்டி: ஆட்சியர் துவக்கி வைப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ,மாணவியர்களுக்கான பேச்சுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு தொடங்கி வைத்தார்.
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரியில், மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில், மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான இந்திய சமூக நீதி வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்கு, பன்மைத்துவமே இந்தியத்துவம், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், ஒழுக்கமற்ற அறிவு, மனித உரிமைகள் பேணுவோம் ஆகிய தலைப்புகளின் கீழ், நடைபெறும் பேச்சுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் தலை நிமிரும் தமிழகம் என்ற லட்சியத்தை தமிழகக் கல்லூரி மாணவ, மாணவியர்களிடம் கொண்டு சேர்க்க தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் தமிழகத்திலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்துக் கல்லூரிகளின் மாணவர்களுக்காக தமிழிலும், ஆங்கிலத்திலும் பேச்சுப் போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்து நடத்தப்பட்டு வருகிறது.
இன்று நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவியர்களுக்கு மாநில அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படவுள்ளது. கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் கலை மற்றும் அறிவியல், மருத்துவம், சட்டம், பொறியியல் தொழில்நுட்பம், ஆகிய பாடத்திட்டங்களைக் கடந்து மாணவர்கள் அறிந்தும் உணர்ந்தும், தெரிய வேண்டிய உன்னத செயல்களை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்திடவும நமது மொழி,பண்பாடு, இலக்கியம், கலைகள், வரலாறு ஆகியவற்றின் புரிதல்களையும், இன உணர்வினையும் அவர்கள் பெற்றிடவும் இப்போட்டிகள் வழிவகுக்கும், அனைத்து மாணவ, மாணவியர்களும் போட்டியில் கலந்து கொள்ள முன்வரவேண்டும்.
போட்டியில் கலந்து கொள்வதே ஒரு வெற்றியாகும். அனைத்து மாணவ,மாணவியர்களும் போட்டியில் கலந்து ஆற்றல் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.டி.நெடுஞ்செழியன், அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரி தலைவர் ஹாஜி எஸ்.கே.செய்யது அஹமது, அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரி தாளாளர் ஹாஜி எஸ்.கே. குதா முகம்மது, அஸ்ஸாதிக்கல்லி கூட்டமைப்பு பொருளாளர் ஹாஜி.ஜாபர்சாதிக், முன்னாள் தேசிய ஆலோசகர் மரு.அமீர்கான், மாமன்ற உறுப்பினர் ரம்சான் அலி, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முதல்வர் எம்.முஹம்மது சாதிக், தூய இஞ்ஞாசியர் கல்வியியல் கல்லூரி மரு.வசந்தி.மடோனா, தூய சவேரியார் கல்லூரி செயலாளர் மரு.அல்போன்ஸ் மாணிக்கம், மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ,மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu