நெல்லையில் நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரிய அடையாள அட்டை பதிவு செய்ய சிறப்பு முகாம்
செய்தியாளர்களை சந்தித்த நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரிய தலைவர் வாகை சந்திரசேகர்.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நாட்டுப்புற இசைக்கலைஞர்களுக்கு நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரிய அடையாள அட்டை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமையில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரிய தலைவர் வாகை சந்திரசேகர் கலந்து கொண்டு முகாமினைத் தொடங்கி வைத்து நாட்டுப்புற கலைஞர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். குறைகள் தொடர்பாக நலவாரிய தலைவர் மற்றும் அதிகாரிகளிடம் எடுத்துரைத்தனர். மேலும் கோரிக்கை மனுக்களையும் வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரிய தலைவர் வாகை சந்திரசேகர் தமிழகத்தில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புற மற்றும் கிராமிய கலைஞர்கள் இருந்தும் கடந்த 10 ஆண்டுகளில் 50,000 பேர் மட்டுமே நலவாரிய அடையாள அட்டை பெற்று உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் நலவாரிய அடையாள அட்டையை எளிதில் பெற பல்வேறு நடவடிக்கைகள் பல்வேறு துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து எடுக்கப்பட்டுள்ளது.
இன்னும் மூன்று மாதகாலத்திற்குள் ஒரு லட்சம் உறுப்பினர்கள் நலவாரியத்தில் சேர்கப்படுவார்கள். நாட்டுப்புற கலைஞர்களுக்கான ஓய்வூதிய தொகை ரூபாய் 2 ஆயிரத்திலிருந்து 3000 ஆக உயர்த்தப்பட்ட போதிலும் அதனை நடைமுறைப்படுத்தாமல் இருந்ததை மாற்றி தற்போது திமுக ஆட்சி அமைந்தவுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளார்.
நாட்டுப்புற கலைஞர்களின் குடும்பநல நிதி ரூபாய் 25,000 வழங்கும் திட்டத்தினை கடந்த மாதம் தொடங்கிய நிலையில் ஒரு மாதத்திற்குள் 18 நாட்டுப்புற கலைஞர்கள் பயன்படும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. கிராமிய கலைஞர்களையும், கலைகளையும் காக்க முதல்வர் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தால் செயல்படுத்தப்பட்டு வந்த இருபத்தொரு வகையான திட்டங்களில் 19 திட்டங்கள் கடந்த ஆட்சி காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அதனை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர முதல்வர் உத்தரவின்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கலைஞர்கள் மட்டுமல்லாது அவர்களது குடும்பமும் காக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் உத்தரவின்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இயல், இசை நாடகத்தில் என தனிப் பள்ளிகள் அமைக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. நாட்டுப்புற கலைகள் குறித்த பயிற்சி பல்கலைகழக அளவில் வழங்கப்பட்டு வருகிறது. கிராமியக் கலைகளை அழிவிலிருந்து தடுக்கும் பொருட்டு அரசு மூலம் நாட்டுப்புற கலைகளை ஊக்குவிக்கும் விதமாக பள்ளி அளவில் பயிற்சி அளிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்த முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
மேலும் அவர் பேசுகையில் ஆறு மாத காலம் மட்டுமே வேலை வாய்ப்பு என்ற நிலையில் இருக்கும் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் விதமாக பல்வேறு துறை சார்ந்த அரசு நிகழ்ச்சிகளில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் வேலை இல்லாத நாட்களில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்து சமய அறநிலைத்துறை கோவில்கள் மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் உடைய நிகழ்ச்சியை நடத்துவது தொடர்பாக அமைச்சர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விரைவில் நடைமுறைப்படுத்துவதற்கான உத்தரவை முதலமைச்சர் பிறப்பிப்பார் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu