முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி ஆர்ப்பாட்டம்
நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி நடத்திய மாபெரும் ஒற்றைக் கோரிக்கை ஆர்ப்பாட்டம்.
முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட்ட அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் பாரபட்சமின்றி விடுதலையை வலியுறுத்தி நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி நடத்திய மாபெரும் ஒற்றைக் கோரிக்கை ஆர்ப்பாட்டம்.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படியும், அரசமைப்பு சட்டப்பிரிவு 161ன் படியும், 10 ஆண்டுகள் கழித்த முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட்ட அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் கருணையோடு உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி, எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக, நெல்லை மேலப்பாளையத்தில் (மார்ச்.26) மாபெரும் ஒற்றைக் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நெல்லை மண்டல தலைவர் சுல்பிகர் அலி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி, தென்காசி மாவட்ட தலைவர் யாசர் கான், கன்னியாகுமரி மாவட்ட தலைவர் சத்தார் அலி, நெல்லை புறநகர் மாவட்ட தலைவர் பீர் மஸ்தான், தூத்துக்குடி மாவட்ட தலைவர் சம்சுதீன், நெல்லை மண்டல பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர் திப்பு சுல்தான் மற்றும் மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தென்மண்டல நிர்வாகி தமிழினியன், பச்சைத் தமிழகம் கட்சியின் நிறுவனர் சுப.உதயகுமார், பாப்புலர் ஃப்ரண்ட் மாநில பொதுச்செயலாளர் முகைதீன் அப்துல் காதர், அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் வழக்கறிஞர் பசும்பொன் பண்டியன் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி உரை நிகழ்த்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக் பேசியதாவது: ஆயுள் சிறைவாசிகள் விடுதலையைப் பொறுத்தவரை தற்போது சட்டத்தின் தடையோ அல்லது நீதிமன்றத்தின் தடையோ எதுவும் இல்லாத சூழலில், முழுக்க முழுக்க அது தமிழக அரசின் கைகளின் மட்டுமே உள்ள விஷயமாகும் என்பதால், கடந்த காலங்களைப் போலல்லாமல், பாரபட்சம் பாராமல் 10 ஆண்டுகள் சிறை தண்டனை கழித்த அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும். மற்ற கைதிகளைப் போன்று கருணை அடிப்படையில் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளுக்கும், 7 தமிழர்களுக்கும் விடுதலையை தமிழக அரசு சாத்தியமாக்க வேண்டும். அதன்படி வெளியிடப்பட்ட சிறைவாசிகள் விடுதலை தொடர்பான தமிழக அரசின் அரசாணையை திரும்பப்பெற்று, பாரபட்சம் இல்லாத புதிய அரசாணையை வெளியிட்டு, அனைத்து சிறைவாசிகளையும் தமிழக அரசு விரைவாக விடுதலை செய்ய வேண்டும். திமுக அரசு மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ள முஸ்லிம் சமூகத்தை தொடர் ஏமாற்றத்திற்கு ஆளாக்க கூடாது என தெரிவித்தார்.
மேலும், ஆட்சியமைத்து 9 மாதங்கள் ஆகியும், ஆயுள் சிறைவாசிகள் விடுதலை விவகாரத்தில் கமிஷன் அமைப்பதை தாண்டி, அரசாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்த அவர், சமீபத்தில் பேரறிவாளன் ஜாமீன் வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதிகள், 30 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன் சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டும், அமைச்சரவை தீர்மானத்தையும் கருத்தில் கொண்டும் தான் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.
இதைதமிழக அரசு கவனத்தில் கொண்டு, தமிழக சிறைகளில் நீண்ட நாள் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முஸ்லிம் ஆயுள் சிறைக் கைதிகள் உள்ளிட்ட அனைத்து ஆயுள் சிறைக் கைதிகளுக்கும் ஜாமீன் வழங்குவதோடு, அவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய கமிஷன்களை அமைப்பதை தாண்டி, அமைச்சரவை தீர்மானத்தை இயற்றவும் முன்வர வேண்டும் என வலியுறுத்தினார். தமிழக முதல்வர் இந்த கோரிக்கையின் நியாயங்களை உணர்ந்து பாரபட்சமின்றி அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நெல்லை மாநகர் மாவட்ட நிர்வாகிகள் பர்கிட் அலாவுதீன், பேட்டை முஸ்தபா, மானூர் சேக் அப்துல்லா, ஹயாத் முகம்மது, ஜவுளி காதர், மஹ்மூதா ரினோஷா ஆலிமா, சேக் சாலி, முகம்மது காசிம், வழக்கறிஞர் ஆரிப் பாட்ஷா, மின்னத்துல்லா, தொகுதி நிர்வாகிகள் சிந்தா, அசனார், ஜெய்லானி, முகம்மது கௌஸ், சிட்டி சேக் உட்பட தொகுதி ,பகுதி, வார்டு நிர்வாகிகள் மற்றும் பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu