உக்ரைன் நாட்டிலுள்ள நெல்லை மாணவனை தாயகம் அழைத்து வர பெற்றோர்கள் கோரிக்கை
உக்ரைனின் மருத்துவம் படித்து வரும் நெல்லையைச் சேர்ந்த மாணவர் மனோக்கார்த்திக்
உக்ரைன் நாட்டில் மருத்துவப் படிப்பிற்காக சென்ற நெல்லை மாணவரை மத்திய, மாநில அரசுகள் தாய் நாட்டிற்கு அழைத்து வர வேண்டும் என மாணவரின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரஷ்யா இன்று காலை முதல் உக்ரைன் நாட்டின் மீது போர்தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. முக்கிய நகரங்களில் விமானம் மூலம் குண்டுகளை வீசி வருகிறது. இதனால் உக்ரைன் நாட்டில் கடும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே அந்த நாட்டில் இந்திய நாட்டைச் சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொழில், வியாபாரம், மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வசித்து வருகின்றனர். தற்போது அவர்களுடைய நிலைமையும் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் மருத்துவப் படிப்பிற்காக உக்ரைன் நாட்டில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படித்து வருகின்றனர். பல்வேறு நகர்ப்பகுதியில் குண்டுகள் ஏவுகணை தாக்குதல் நடந்து வருவதால் அங்குள்ள மாணவர்கள் அச்சம் அடைந்ததுடன் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் தங்களது குடும்பத்தை தொடர்புகொண்டு அங்குள்ள நிலைமை குறித்து பேசிவருவதுடன் தாங்கள் உயிருக்கு ஆபத்தான நிலை இருப்பதாகவும் உருக்கமுடன் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நெல்லை பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த சேகர்செல்வின் , அமுதா தம்பதியரின் மகன் மனோக்கார்த்திக் என்ற மாணவர் உக்ரைன் நாட்டில் மருத்துவம் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். தற்போது போர் காரணமாக அவரது குடும்பத்தினரும் அச்சம் அடைந்துள்ளனர
அவரது குடும்பத்தினர் எங்கள் மகன் உக்ரைன் நாட்டில் முதலாம் ஆண்டு படித்து வருகிறான், அங்கு சென்று சில மாதங்கள் தான் ஆகிறது, இன்று காலை முதல் அங்கு நடக்கும் நிகழ்வுகள் எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது, தொலைபேசியில் தொடர்ந்து பேசி வருகிறான். தற்போது பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளான். இருந்த போதும் மத்திய, மாநில அரசுகள் இதில் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தனது மகன் மட்டும் அல்லாது அங்கு அச்சத்துடன் இருக்கும் மாணவர்களை மீட்டு தாய்நாட்டிற்கு அழைத்துவர வேண்டும் என தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu