நெல்லையில் வேளாண்துறையினரின் நெல் திருவிழா: சபாநாயகர் அப்பாவு பங்கேற்பு
சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டார்.
பாரம்பரிய நெல்லை மீட்டெடுக்கும் வகையிலும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் நெல் திருவிழா பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமையில் நடைபெற்றது.
இதில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டார். பின்னர் குத்துவிளக்கேற்றி திருவிழாவைத் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் பாரம்பரிய நெல் ரகங்கள், விதைகள், இயற்கை விவசாய முறைகள் குறித்த தகவல்கள், மரக்கால், தண்ணீர் இறைக்கும் கமலை கூணை, இறைவெட்டி உள்ளிட்ட பழங்கால நீர்பாசன கருவிகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
தொடர்ந்து விழாவில் பேசிய சபாநாயகர் அப்பாவு, நம் முன்னோர்கள் விவசாயத்தில் தலைசிறந்தவர்களாக விளங்கினர். அவர்கள் பாரம்பரிய நெல்லை பாதுகாத்ததன் காரணமாகத்தான் இன்று நாம் அதனை பார்க்க முடிகிறது. அதற்காக இன்று விழாவும் நடத்துகிறோம்.
நெல்லை மாவட்டத்தில் ௧.25 லட்சம் ஏக்கர் நிலத்தில் விவசாயம் நடந்து வருகிறது. குறிப்பாக நெல் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. நெல் என்பது நமது நாகரிகத்தின் அடிப்படையாகும், சத்தான, பாரம்பரியமான நெல், அரிசி ஆகியவை கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது மகிழ்சி அளிக்கிறது.
திமுக அரசும் விவசாயிகளுக்கான ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வேளாண்துறைக்கு என தனி பட்ஜெட், நேரடி கொள்முதல் நிலையம், விவசாய கடன்கள் ரத்து, 40 கிராமிற்கு குறைவாக தங்கநகை கடன் பெற்ற விவசாயிகளுக்கு தள்ளுபடி என ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கி மாநிலம் இந்தியாவிலேயே தமிழகம் தான் என தெரிவித்தார்.
தொடர்ந்து இயற்கை விவசாயத்தில் நெல் உற்பத்தி என்ற நூலை வெளிட்டு விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதைகளை வழங்கியதுடன் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் பவர்டில்லர், டிராக்டர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இந்த விழாவில் நெகிழியை தவிற்கும் வகையில் மேடையில் பனை ஓலை, நெற்கதிர்கள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு அழகு படுத்தப்பட்டிருந்தது. மேலும், முக்கிய பிரமுகர்களுக்கு நெற்கதிரால் ஆன பொக்கை, மற்றும் மாலையும் அணிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜிலா சத்தியானந்த், வேளாண்துறை இணை இயக்குனர் கஜேந்திரப்பண்டியன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu