ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு எதிர்ப்பு: வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டம்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் வியாபாரிகள் கடையை அடைத்து குடும்பத்துடன் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் சுமார் 80 ஆண்டுகள் பழமை வாய்ந்த காந்தி மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு காய்கறி கடை, மளிகை கடை, ஜவுளி கடை என மொத்தம் 540 கடைகள் உள்ளன. சிறு, குறு மற்றும் பெரிய வியாபாரிகள், தொழிலாளர்கள் என சுமார் 5000 குடும்பங்கள் இந்த மார்க்கெட்டை நம்பி உள்ளனர்.
இந்நிலையில் சீர்மிகு நகர் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட்டை இடித்து விட்டு சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பில் நவீன அடுக்குமாடி கட்டிடம் கட்ட மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேசமயம் மாற்றுக் கடைகள் வழங்குவதில் உள்ள சிக்கல்கள் மற்றும் ஏற்கனவே கடை வைத்துள்ளவர்களுக்கு புதிய கடை கொடுப்பதில் ஏற்படும் சிக்கல்களை கருத்தில் கொண்டு மார்க்கெட்டை இடிக்க ஆரம்பத்தில் இருந்தே வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து மார்க்கெட் அருகில் உள்ள ஜவகர் திடல் அல்லது காவலர் குடியிருப்பில் மாற்று கடைகள் தருவதாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி உறுதியளித்துள்ளது. ஆனால் தற்போது, மேற்கண்ட இரண்டு இடங்களையும் வழங்காமல் கிருபா நகரில் மாற்று இடம் தரப்போவதாக திடீரென மாநகராட்சி கூறியுள்ளது.
இதை கண்டித்து பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் வியாபாரிகள் ஐக்கிய சங்கம் சார்பில் இன்று கடைகளை அடைத்து குடும்பத்துடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என 500க்கும் மேற்பட்டோர் அமைதியான முறையில் உள்ளிருப்பு போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில்:- நாங்கள் பல ஆண்டுகளாக இங்கு கடைகள் நடத்தி வருகிறோம். திடீரென கடையை இடிக்கப்போவதாக கூறுகின்றனர். இதை விட்டால் எங்களுக்கு வேறு பிழைப்பு தெரியாது. முதலில் மார்க்கெட் அருகிலேயே மாற்று இடம் கொடுப்பதாக கூறினார்கள். ஆனால் தற்போது கிருபா நகரில் தருவதாக தெரிவிக்கின்றனர்.
அங்கு பஸ் வசதி இல்லை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவே எங்களுக்கு மார்க்கெட் அருகில் ஜவகர் திடலில் அல்லது காவலர் குடியிருப்பில் மாற்றுக் கடைகள் ஒதுக்க வேண்டும், இல்லை என்றால் மார்க்கெட்டை இடிக்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று போராட்டம் நடத்தி வருகிறோம். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu