வரலாற்று சிறப்புமிக்க மாவட்டமாக நெல்லை திகழ்கிறது : சபாநாயகர் அப்பாவு பேச்சு
பாளையங்கோட்டையில் நடந்த புத்தகத்திருவிழாவில் பேசிய தமிழக சட்டப்பேரவைத்தலைவர் அப்பாவு
திருநெல்வேலியில் 5வது பொருநை நெல்லைப் புத்தகத் திருவிழாவினை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு இன்று திறந்து வைத்து பேசியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் இந்த ஆண்டு சென்னை புத்தகத் திருவிழாவினை பிப்ரவரி 12ஆம் தேதி சென்னையில் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து இந்தாண்டு இரண்டாவது புத்தகத் திருவிழா கண்காட்சி திருநெல்வேலியில் தான் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத் திருவிழா கண்காட்சியில் 126 அரங்குகள் அமைக்கப்பட்டு புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் புத்தக திருவிழாவில் பார்வையாளர்களை கவரும் வகையில் ஆதிச்சல்லூர், சிவகளை உள்ளிட்ட அகழாய்வுயில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்தும் பொருநை தொல்பொருள் முப்பரிமாண அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க மாவட்டமாக திருநெல்வேலி மாவட்டம் திகழ்கிறது.
இந்தமாவட்டத்தில் பல்வேறு இலக்கியவாதிகள், வ.உ.சி, மகாகவி பாரதியார், வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன், ஒண்டிவீரன் போன்ற சுதந்திர போராட்ட வீரர்கள் இந்த மண்ணில் பிறந்தவர்கள். பத்திரிக்கை உலகின் ஜாம்பவன்களும் இம்மண்ணில் பிறந்தவர்கள் தான், சமஸ்கிருதம்தான் ஆதி நூல் சமஸ்கிருதம் தான் ஆதி மதம் என்பதை உடைத்து, இது திராவிட நாகரிகம் என்று முதலில் சுட்டி காட்டிய கார்டுவெல் வாழ்ந்தது திருநெல்வேலி மாவட்டம் தான். தமிழ்நாட்டில் சாகித்திய அகடாமி விருதினை அதிக பெற்றவர் நமது திருநெல்வேலி மாவட்ட எழுத்தாளர்கள் தான். 1977- ம் ஆண்டு தென்னிந்திய புத்தக கண்காட்சி நடைபெற்றது.
அப்போது 22 அரங்குகள்தான் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று இந்தியாவே வியக்கும் வகையில் சென்னையில் 800 அரங்குகள் அமைக்கப்பட்டு மிகப்பெரிய அளவில் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 12 கோடி ரூபாய்க்கு விற்பனையாகிவுள்ளது. 15 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர், இதன் மூலம் தமிழகத்தில் வாசிப்புத்திறன் அதிகமாக உள்ளது என்பதை உணர முடிகிறது. அமெரிக்க ஜனாதிபதி ஹிலாரி கிளிண்டன் சென்னை வந்தபோது அண்ணா நூலகத்தை பார்த்து ஆசியாவிலையே இப்படி ஒரு நூலகம் இல்லை என தெரிவித்தார்.
இந்த நூலகத்தை கட்டியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர், இன்னும் சிறப்பாக மதுரையில் 99 கோடி மதிப்பில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார். விரைவில் அதற்கான பணிகள் நடைபெறவுள்ளது. தந்தை பெரியார் அண்ணா, கலைஞர், ஆகியோர் வழியில் தற்போது வாழும் தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக நீதியை முன்னெடுத்து செல்வதால் பட்டி தொட்டியெல்லாம் கல்வி உயர்ந்த நிலையை அடைந்துள்ளது.இந்த புத்தகத் திருவிழா கண்காட்சியினை அனைத்து மாணவர்களும், பொதுமக்களும் பயன்படுத்தி தன்னுடைய அறிவு திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு அவர்கள் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu