நெல்லை மாநகர மக்களை பதறவைத்த திடீர் கனமழை: வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
திருநெல்வேலியில் திடீரென பெய்த கன மழையால் தற்காலிக புதிய பேருந்து நிலையம் தண்ணீரில் மூழ்கியது. வீட்டிற்குள் தண்ணீர் புகுந்தன. தமிழ்நாட்டில் சென்னையை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தை மிரளவைத்த கனமழை கடந்த இரண்டு மூன்று தினங்களாக சற்று ஓய்ந்து காணப்பட்டது. வழக்கமான பருவமழை என்றாலும் கூட குறிப்பிட்ட இடங்களில் இடைவிடாமல் தொடர்ச்சியாக கொட்டித் தீர்க்கும் பலத்த மழையால் எதிர்பாராத சேதங்கள் ஏற்பட்டன.
முன்பெல்லாம் மழை வந்தாலே இயற்கையோடு ஒன்றி வானிலையை ரசிக்கும் பொதுமக்கள் தற்போது மழை என்றாலே ஒருவித அச்சத்தோடு பார்க்கின்றனர். அந்தவகையில் நெல்லை மாவட்டத்தில் இன்று மாலை முதல் பெய்துவரும் திடீர் கனமழையால் ஆங்காங்கே வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்தும் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்தும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் மக்கள் மிரண்டு போயுள்ளனர்.
பாளையங்கோட்டை செந்தில்நகர் பகுதியில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பீதியடைந்துள்ளனர். வீட்டினுள் புகுந்த தண்ணீரை குடும்பத்துடன் பாத்திரங்கள் வைத்து வெளியே இறைத்து ஊற்றி வருகின்றனர்.
சரியாக மாலை 5 மணியளவில் வானிலை தலைகீழாக மாறி கருமேகங்கள் திரண்டு இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டத் தொடங்கியது. தொடர்ந்து இடைவிடாமல் மாநகர் முழுவதும் நீடித்த பலத்த மழையால், ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக பாளையங்கோட்டை மற்றும் கேடிசி நகர் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக கேடிசி நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே தங்கம் காலனியை சேர்ந்த பார்வதி என்பவரின் காம்பவுன்ட் சுவர் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அருகில் யாரும் செல்லாததால் யாருக்கும் சேதம் இல்லை.
பாளையங்கோட்டை மனக்காவலம்பிள்ளை நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் உள் நோயாளிகள் மற்றும் செவிலியர்கள் அவதி அடைந்துள்ளனர். கிருஷ்ணாபுரம் பகுதியில் கொட்டி தீர்த்த கன மழையால் பல்வேறு வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. மேலும் நெல்லை தற்காலிக புதிய பேருந்து நிலையம் மழை நீரில் மூழ்கி குளம் போல் காட்சியளிக்கிறது.
இந்த தற்காலிக புதிய பேருந்து நிலையம் மிகவும் தாழ்வான பகுதி என்பதால் லேசான மழைக்கே அங்கு சேரும் சகதியுமாக காட்சியளிக்கும், தற்போது பெய்த பலத்த மழையால் பேருந்து நிலையம் முழுவதும் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கின்றது. இதனால் பல்வேறு ஊர்களுக்கு செல்வதற்காக பேருந்து நிலையம் வந்த பயணிகள் பெரும் சிரமம் அடைந்தனர்.
மாநகரின் பல முக்கிய சாலைகள் பழுதடைந்த நிலையில் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது, இப்போது பெய்த மழையால் விபத்தை உண்டாக்கும் சாலைகளாக மாறியுள்ளது. சாலையில் பயணிக்கும் மக்கள் பயந்து கொண்டே செல்ல வேண்டியுள்ளதாக கூறுகின்றனர்.
தொடர்ந்து பல்வேறு வீடுகளுக்குள் மழை நீர் புகுந்திருப்பதால் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் நெல்லை நீதிமன்ற வளாகத்தின் காம்பவுன்ட் சுவரும் பலத்த மழையால் இடிந்து விழுந்துள்ளது. கனமழை காரணமாக மாநகரின் பல்வேறு இடங்களில் அவ்வபோது மின் தடையும் ஏற்பட்டுள்ளது.
இதேபோல் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்துள்ளது. தொடர்ந்து பருவமழை காரணமாக அடுத்தடுத்து மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கையாக உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து மழை சேதங்களை தடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu