நெல்லை கிராப்ட்ஸ்: எல்லா கைவினைப் பொருட்களும் ஒரே இடத்தில் விற்பனை.!

நெல்லை கிராப்ட்ஸ்: எல்லா கைவினைப் பொருட்களும் ஒரே இடத்தில் விற்பனை.!
X
கைவினைப் பொருட்கள் மொத்தமும் ஒரே இடத்தில் விற்பனை செய்யப்படுவதால், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தாமிரபரணி ஆறு, இருட்டுக்கடை அல்வா போன்ற பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய நெல்லை மாவட்டத்தில் கைவினைத் தொழிலும் பிரதானமாக உள்ளது. குறிப்பாக நெல்லை ராதாபுரத்தில் பனை ஓலை பொருட்கள், அம்பாசமுத்திரத்தில் குத்துவிளக்கு, காரகுறிச்சி மண்பாண்ட பொருட்கள், கல்லிடைக்குறிச்சி அப்பளம், வீரவநல்லூர் கைத்தறி சேலைகள் என பல்வேறு கைவினை பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.


நவீன உலகத்தில் புதுப்புது இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் கூட மேற்கண்ட பொருட்களை இன்றுவரை கைவினைத் தொழிலாளர்கள் பாரம்பரிய முறைப்படி தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். அதேபோல் மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த ஏராளமான பெண்களும் கைவினைத் தொழிலில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்று மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே விற்பனை செய்யப்படும் கைவினைப் பொருட்களை ஒரே இடத்தில் வைத்து விற்பதன் மூலம் பொதுமக்களுக்கும் கைவினை தொழிலாளர்களும் பயன் பெறுவார்கள் என்ற நோக்கத்தோடு நெல்லை மாவட்ட நிர்வாகம் புதுமுயற்சியை கையில் எடுத்துள்ளது. அதன்படி மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மகளிர் திட்ட வளாகத்தில், நெல்லை கிராப்ட்ஸ் என்ற விற்பனைக்கூடம் கடந்த பிப்ரவரி மாதம் துவங்கப்பட்டது. இங்கு மாவட்டம் முழுவதும் உற்பத்தி செய்யப்படும் சுமார் 60 வகையான கைவினைப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி ராதாபுரம் பகுதியில் செய்யப்படும் பனைஓலை பொருட்களான திருமண பெட்டி, பழக்கூடை, காய்கறிக் கூடை, இடியாப்ப தட்டு, மிட்டாய் தட்டு, விசிறி மற்றும் காரைக்குறிச்சி பகுதியில் தயாரிக்கப்படும் மண்பாண்ட பொருட்களான மண் ஜாடிகள், மண் தோசைக்கல், தயிர் தாடி, அகல்விளக்கு, குழம்பு சட்டி, கற்றாழை நாரால் செய்யப்படும் பந்து வடிவலான மின்விளக்கு விசிறி, பூக்கூடை, அழுக்கு கூடை, மேலும் பத்தமடை பாய்கள், மரத்தினால் செய்யப்பட்ட அழகு சாதன பொருட்கள், குழந்தைகளின் விளையாட்டு பொருட்கள் என பலவகையான கைவினை பொருட்கள் விதவிதமான வடிவங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


அனைத்தும் ஒரே இடத்தில் வைத்து கைவினைப் பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் பொது மக்களுக்கு பயனுள்ளதாக இருப்பது மட்டுமல்லாமல் இத் தொழிலை நம்பியுள்ள கைவினைத் தொழிலாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த பெண்களுக்கும் அதிக லாபம் கிடைப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த விற்பனை கூடத்திற்கு பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது நாள்தோறும் சராசரியாக 1500 ரூபாய்க்கு விற்பனையாகி வருவதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து நெல்லை கிராப்ட்ஸ் விற்பனை கூடத்தில் பணியாற்றும் ஊழியர் வினோலியா கூறுகையில், நெல்லை மாவட்டத்தில் ஒவ்வொரு சிறப்பு வாய்ந்த கைவினைப் பொருட்களும் இங்கு மொத்தமாக விற்கப்படுகிறது. குறிப்பாக பனையோலையால் செய்யப்பட்ட பொருட்கள், மரச்சாமான்கள் செய்யப்பட்ட பொருட்கள், காருகுறிச்சி மண்பாண்ட பொருட்கள் என பல்வேறு வகையான பொருட்கள் இங்கு விற்பனை செய்யப்படுகிறது. இது முழுக்க முழுக்க இயற்கை சார்ந்த பொருட்கள் என்பதால் பொதுமக்களின் உடல் நலத்திற்கும் ஆரோக்கியமான ஒன்றாகும். பொதுமக்கள் ஆதரித்தால் கைவினை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும், அரசு எங்களை போன்ற மகளிர் சுய உதவி குழுக்களுக்கு உதவி செய்ததால் இதுபோன்ற தொழிலை எங்களால் செய்ய முடிகிறது என்று தெரிவித்தார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil