நெல்லை-தென்காசி மாவட்ட உள்ளாட்சி தேர்தல்: மாநில தேர்தல் ஆணையர் ஆலாேசனை
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு இரண்டு மாவட்ட ஆட்சியர்கள், தேர்தல் அலுவலர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டில் நெல்லை, தென்காசி, வேலூர் உள்பட விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் வரும் செப்டம்பர் மாதம் நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தி வருகிறார். அந்த வகையில் இன்று நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கொக்கிரகுளம் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேர்தல் ஆணைய செயலாளர் சுந்தரவல்லி முதன்மை தேர்தல் அலுவலர்கள், மண்டல தேர்தல் அலுவலர்கள் மற்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தின் போது நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் செய்வது வாக்குச்சாவடிகள் அமைப்பது, வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்வது, வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பது போன்ற விஷயங்கள் குறித்து அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர் ஆலோசித்தார்.
குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் 12 மாவட்ட கவுன்சிலர்கள், 122 யூனியன் கவுன்சிலர்கள், 204 கிராம பஞ்சாயத்து தலைவர்கள், 1731 வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 2069 பதவிகளுக்கும், தென்காசி மாவட்டத்தில் 14 மாவட்ட கவுன்சிலர்கள், 144 யூனியன் கவுன்சிலர்கள், 221 கிராம பஞ்சாயத்து தலைவர்கள், 1095 வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 2294 பதிவிகளுக்கும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனவே இன்னும் ஓரிரு வாரங்களில் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இது போன்ற சூழ்நிலையில் மாநில தேர்தல் ஆணையர் நெல்லையில் இன்று ஆலோசனை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu