பெருந்தலைவர் காமராஜர்- இந்திராகாந்தி வெண்கல சிலைகள்: கனிமொழி எம்.பி திறப்பு
திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் புனரமைக்கப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் - அன்னை இந்திராகாந்தி வெண்கல சிலைகள் திறப்பு விழாவில் கலந்துகொண்டு கனிமொழி எம்.பி சிறப்புரையாற்றினார். பொருளாதார வளர்ச்சி , எல்லோருக்கும் உரிமை, சாதி மதங்களை கடந்து வளர்ச்சி பாதையில் செல்ல நம்மை பிரித்தாளும் சக்தியை எதிர்த்து நிற்கவேண்டும் என நெல்லையில் பெருந்தலைவர் காமராஜர், இந்திராகாந்தி ஆகியோர் சிலைகளை திறந்து வைத்த நாடாளுமன்ற குழு துணை தலைவர் கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
நெல்லையில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வண்ணார்பேட்டையில் உள்ள செல்லபாண்டியன் பவனமான காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பெருந்தலைவர் காமராஜர், மற்றும் இந்திராகாந்தி ஆகியோர் வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் நடைபெற்றது . இதில் திமுக நாடாளுமன்ற குழு துணைத்தலைவர் கனிமொழி எம்.பி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிலைகளை திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில் - பெருந்தலைவர் காமராஜர், இந்திரா காந்தி ஆகிய இருவர் மீதும் தலைவர் கலைஞர் வைத்திருந்த பற்று பாசத்தை அனைவரும் அறிவார்கள். பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை கல்வி எழுச்சி நாளாக அறிவித்து அதனை சட்டமாக்கியவர் கலைஞர். திமுகவும், காங்கிரஸூம் வெவ்வேறு இயக்கங்களாக இருந்தாலும் நாடு, உரிமை, மக்கள் என வந்துவிட்டால இரண்டு இயக்கங்களும் இணைந்து பணியாற்றும். அனைவரும் கல்வி கற்க பள்ளிக்கு வரவேண்டும் என்பதற்காக மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் காமராஜர், இதனை அடுத்த நிலைக்கு எடுத்துச்சென்றவர் கலைஞர், திமுக ஆட்சியில் உயர்கல்வி பெரிய வளர்ச்சியை பெற்றது. பொருளாதார வளர்ச்சி , எல்லோருக்கும் உரிமை, சாதி மதங்களை கடந்து வளர்ச்சி பாதையில் செல்ல நம்மை பிரித்தாளும் சக்தியை எதிர்த்து நிற்கவேண்டும் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் அழகிரி பேசுகையில் - சோழர்களுக்கு பின் தமிழகத்தின் பெருமையை உலகறியச் செய்தவர் காமராஜர்தான், இந்தியாவிலேய தமிழகம் கல்வியில் சிறந்து விளங்குவதற்கு காரணம் 50 ஆண்டுகளுக்கு முன் காமராஜர் போட்ட விதைதான், நாட்டில் பசிப்பிணியை போக்கியவர் இந்திராகாந்தி அமெரிக்க நாட்டில் இருந்து உணவு பொருட்களை நம்நாடு பெற்று வந்தது, இந்திரா காந்தி புரட்சி பெண், தடைகளை உடைத்தெரிந்தவர் பசுமைப் புரட்சியை கொண்டு வந்து இந்தியாவை உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறச் செய்தவர் என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப், மேயர் சரவணன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் திருநாவுக்கரசர், விஜய்வசந்த் , காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பழனி நாடார், ராஜேஷ்குமார், ஊர்வசி அமிர்தராஜ் , காங்கிரஸ் மாவட்ட செயலாளர்கள் சங்கரபாண்டியன், ஜெயகுமார், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu