பாளையங்கோட்டை பகுதியில் பெய்த கனமழைக்கு வீடு இடிந்து விழுந்தது

பாளையங்கோட்டை பகுதியில் பெய்த கனமழைக்கு வீடு இடிந்து விழுந்தது
X

கனமழை காரணமாக இடிந்த வீடு

பாளையங்கோட்டை பகுதியில் பெய்த கனமழையால் பட்டுபிள்ளையார் கோயில் அருகே உள்ள வீடு ஒன்று முழுவதும் இடிந்து விழுந்தது.

இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 18 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்த நிலையில் நெல்லை மாநகர பகுதியில் நேற்று காலை முதலே வெயில் தாக்கம் குறைந்து இதமான சூழல் நிலவி வந்தது.

இந்த நிலையில் மாலை திடீரென மாநகரின் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை, தச்சநல்லூர், சமாதானபுரம், பெருமாள்புரம், கேடிசி நகர், நெல்லை, சந்திப்பு டவுன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் அரைமணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது.

ஏற்கனவே நேற்றும் நெல்லை மாநகர பகுதியில் கனமழை பெய்த நிலையில் மீண்டும் பலத்த மழை பெய்ததால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது. குறிப்பாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.

இதற்கிடையில் பாளையங்கோட்டை பகுதியில் பெய்த கனமழையால் பட்டுபிள்ளையார் கோயில் அருகே உள்ள வீடு ஒன்று முழுவதும் இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. அதேபோல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சம் சேரன்மகாதேவியில் 5 சென்டி மீட்டர் மழையும், அம்பாசமுத்திரத்தில் 4 சென்டி மீட்டர், பாளையங்கோட்டையில் 3 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

தொடர்ச்சியாக கடந்த சில தினங்களாக நெல்லை மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
ai marketing future