பட்டணப்பிரவேசம் நடத்த தடை போட்டால் திமுக அரசுக்கு தடை ஏற்படும்: இந்து முன்னணி தலைவர்
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்
இன்று நெல்லை மாவட்டம் தியாகராஜ நகரில் நிர்வாகி ஒருவரின் இல்ல விழாவில் கலந்து கொண்ட இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:-
தாமிரபரணி வெள்ள நீர் கால்வாய் திட்டம் 300 கோடி பட்ஜெட்டில் போடப்பட்டது. 20 ஆண்டுகளாக அத்திட்டத்தை நிறைவேற்றாமல் அரசு கிடப்பில் போட்டுள்ளது. தற்போது இந்த திட்டத்தின் மதிப்பு 900 கோடியை தாண்டி உள்ளது. எனவே அரசு உடனடியாக இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இத்திட்டத்தை நிறைவேற்றுவதால் 200க்கும் மேற்பட்ட குளங்களில் தண்ணீர் நிரப்ப முடியும். நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் பற்றாக்குறை சரி செய்யப்படும். எனவே இத்திட்டத்தை உடனே நிறைவேற்ற கோரி நாளை சம்பந்தப்பட்ட அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்த இருக்கிறோம்.
இந்த அரசு நாத்திக அரசு. இந்த அரசுடன் கூட்டணியில் இருப்பவர்கள் தேசவிரோத கூட்டணிக் கட்சிகளாக உள்ளனர்.. மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவதில் வேகம் காட்டுவதை விட்டு இந்து கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் கொச்சைப்படுத்த வேண்டும். தடுக்க வேண்டும். என்பதில் இந்த அரசு வேகமாக செயல்படுகிறது.
தருமபுரம் ஆதீனத்தில் 500 ஆண்டுகளுக்கும் மேலாக கோயில் வளாகத்திலேயே பட்டினப்பிரவேசம் நடந்து கொண்டு இருக்கிறது. அதற்கு இவ்வளவு வேகமாக தடை செய்து இந்த அரசு அறிக்கை விடுத்துள்ளது. நாகூர் தர்காவில் தலைமை ஹாஜியை இஸ்லாமியர்கள் தூக்கிச் செல்கிறார்கள். கிறிஸ்தவ போப்பை தூக்கி செல்கிறார்கள். அதை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு மரபு இருக்கிறது. அந்த மரபுபடியே அனைத்தும் நடக்கிறது. எனவே இதற்கு தடை விதித்தால் இந்த அரசாங்கம் நடத்துவதற்கு தடை ஏற்படும்.
தமிழக அரசில் துறை அமைச்சர்களுக்கு, அதிகாரிகளுக்கு என்ன லாபம் இருக்கிறது என்பதை பொறுத்தே திட்டங்களை நிறைவேற்றுகின்றனர். நாடு முழுவதும் இந்து கோவிலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தொடர்ந்து கூறி வருகிறோம். இதுவரை அமைச்சர் சேகர்பாபு பதிலளிக்கவில்லை. பண்டிகைகளுக்கு என்னென்ன இடையூறு கொடுக்க வேண்டும் என்பதையே இந்த நாத்திக அரசாங்கம் நோக்கமாக வைத்துள்ளது.
அதிமுகவும் இந்த விஷயத்தில் ஒரே போல தான் செயல்படுகின்றனர். மக்கள் மத்தியில் ஒரு வேகம் ஏற்பட்டுள்ளது. தெரியாமல் இவர்களுக்கு ஓட்டு போட்டு விட்டோம் என்று நினைக்கிறார்கள். தொடர்ந்து இந்த கெடுபிடிகள் நீடித்தால் இந்த அரசு வரும் தேர்தலில் தோல்வியை சந்திக்கும் என்று தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu