சிவன் கோயில் பட்டர் மீது இந்து முன்னணியினர் புகார்

சிவன் கோயில் பட்டர் மீது இந்து முன்னணியினர் புகார்
X
சிவன் கோயில் பட்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து முன்னணியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதால் பரபரப்பு.

நெல்லையில் காயத்ரி மந்திரத்தை இழிவுப்படுத்தும் வகையில், இயேசுவின் படத்தின் முன்பு யாகசாலை அமைத்து காயத்ரி மந்திரம் படித்த சிவன் கோயில் பட்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து முன்னணியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதால் பரபரப்பு.

நெல்லையில் புகழ்பெற்ற பாளையங்கோட்டை திருபுராந்தீஸ்வரர் கோவிலைச் சேர்ந்த பட்டர் பாக்யராஜ் என்பவர் காயத்ரி மந்திரத்தை அவமதிக்கும் வகையில், நிகழ்ச்சி ஒன்றில் இயேசுவின் படத்தின் முன்பு யாகசாலை அமைத்து கிறிஸ்துவ மதத்துக்கு ஏற்றாற்போல் காயத்ரி மந்திரத்தை மாற்றி இந்து மதத்தையும், புனித ஹோமங்களையும், உள்நோக்கத்தோடு இழிவுப்படுத்தியதாக நெல்லை மாவட்ட இந்து முன்னணியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக இந்து முன்னணி கொக்கிரக்குளம் பகுதி தலைவர் சிவா சார்பில், மாநில செயலாளர் குற்றாலநாதன் தலைமையில் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் பட்டர் பாக்யராஜ் மீது நடவடிக்கை எடுக்கும்படி இன்று புகார் அளித்தனர்.

புகார் மனுவில், காயத்ரி மந்திரத்தை வேண்டுமென்றே பட்டர் பாக்யராஜ் கேவலப்படுத்துவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கிறிஸ்தவத்திற்கும், யாகத்திற்கும், காயத்திரி மந்திரத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. மந்திரங்களை இழிவுபடுத்தி இரண்டு மதங்களுக்கிடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் அவர் செயல்பட்டுள்ளார். இதுவரை மனிதர்களை தான் மதமாற்றம் செய்து வந்த நிலையில், தற்போது இந்து மந்திரங்களையும் மதமாற்றம் செய்ய முயற்சி செய்கின்றனர். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடபட்டிருந்தன.

நெல்லையில் பழமை வாய்ந்த சிவன் கோவிலை சேர்ந்த பட்டர் கிறிஸ்தவ மதத்திற்கு ஆதரவாக இயேசுவின் படத்தை வைத்து யாகம் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ai marketing future