ஒற்றைச்சாளர முறையில் உரிமம் தர தமிழக அரசு முன் வர வேண்டும்: விக்கிரமராஜா

ஒற்றைச்சாளர முறையில் உரிமம் தர தமிழக அரசு முன் வர வேண்டும்:  விக்கிரமராஜா
X

நெல்லையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அளித்த பேட்டி

மே 5 -ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநாட்டிற்காக மண்டல வாரியாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

வணிகர் நல வாரியத்தில் ஜிஎஸ்டி பதிவு இல்லாதவர்களை இணைக்க அரசு நடவடிக்கை எடுத்தது போல் வியாபாரிகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையும் அதிகரிப்பு செய்ய தமிழக நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிட வேண்டும். வணிகர்கள் கடை நடத்துவதற்கு பெறும் உரிமத்தை ஒற்றைச்சாளர முறையில் பெற்றிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

மே 5ஆம் தேதி திருச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்காக தமிழ்நாடு முழுவதும் மண்டல வாரியாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களை உள்ளடக்கிய நெல்லை மண்டல வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மே 5ஆம் தேதி நடைபெறும் வணிகர் சங்க மாநாட்டில் நெல்லை மண்டலம் சார்பில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பிப்பது, மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறியதாவது:

மே 5 ஆம் தேதி திருச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 39 வது மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பல லட்சம் வியாபாரிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கலந்து கொள்கின்றனர். மே 5ஆம் தேதி வணிகர் சங்கம் சார்பில் நடைபெறும் மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்கிறார். மாநாட்டில் வியாபாரிகளுக்கு தேவையான பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.

ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கடைகளின் வாடகை பன்மடங்கு உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகளிடம் வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அறநிலையத்துறை கடைகளில் வாடகை தொகைகளை நெறிமுறை செய்ய வேண்டும். தமிழக கலெக்டர்கள் மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், ரவுடியிசத்தைக் கட்டுப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டதற்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறது.

ஜிஎஸ்டி வரிவிதிப்பு உயர்வை கண்டித்து வரும் 22 ஆம் தேதி சென்னையில் நடக்கும் கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்கப்படும். மத்திய அரசினை கண்டித்து முதல்கட்டமாக ஆர்பாட்டம், உண்ணாவிரத போராட்டமும் அதிலும் முடிவு எட்டபடவில்லை என்றால், வணிகர் சங்க கூட்டமைப்புடன் இணைந்து மாநில அளவிலான கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார். கொரோனா பேரிடர் காலத்தில் அறிவிக்கப்பட்ட கட்டுபாடுகளை அரசு முழுதுமாக தளர்த்துவதோடு முகக்கவசம் அணிவது கட்டாயம் என்பதை அரசு அகற்ற வேண்டும் என தெரிவித்தார்.

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் நீண்ட ஆண்டுக்கு பிறகு வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அதன் மூலம் வணிகர்களுக்கு இழப்பீடு வழங்கும் 1980 ல் உள்ள நடைமுறையை மாற்றி கணிசமாக உயர்த்தி அறிவிக்கவேண்டும். வியாபாரிகள் கடை நடத்த 8 முதல் 12 உரிமங்கள் வரை பெற வேண்டியுள்ளதை மாற்றி ஒரே உரிமம் 5 ஆண்டு செல்லதக் கவகையில் இருக்கும் வகையில் நடவடிக்கைகளை நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கவேண்டும்.

வணிகர்கள் வடிகட்டி உரிமம் வாங்குவதில் பல்வேறு சிக்கல்களை வருவதை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஒற்றைச்சாளர முறையில் வணிகர்களுக்கான உரிமம் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் அவ்வாறு அமல்படுத்தும் பட்சத்தில் வணிகர்கள் உரிமம் பெறும்போது நடைபெறும் ஊழல்கள் மற்றும் லஞ்சம் தவிர்ப்பதற்கான நடவடிக்கையாக அமையும். தமிழ்நாடு அரசு உள்ளாட்சி மற்றும் அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள கடைகளின் வாடகை கட்டணத்தை முறைப்படுத்த தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் வணிகர்களையும் இணைக்க வேண்டும் என்றார் ஏ.எம். விக்கிரமராஜா..

Tags

Next Story
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு