கொரோனா விதி மீறல்: டி.வி நடிகருடன் செல்ஃபீ - செல்போன் கடைக்கு சீல்
நெல்லையில் மாநகராட்சி அதிகாரிகளால் சீல் வைக்கப்படும் செல்போன் கடை.
கொரோனா பயத்தையும் மீறி சின்னத்திரை காமெடி நடிகருடன் செல்ஃபி எடுக்க முயன்ற நெல்லை இளைஞர்கள் மீது காவல்துறையினர் கூட்டத்தை கலைக்க லேசாக தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மாநகராட்சி அலுவலர்கள் கடையை சீல் வைத்தனர்.
நெல்லை, வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் பவனத்தில் புதிதாக தனியார் செல்போன் நிறுவனத்தின் ஆன்லைன் சேவைக்கான வெப்சைட் துவக்க விழா நடைபெற்றது. இதில் விஜய் டி.வி காமெடி நடிகர் புகழ், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெப்சைட்டை துவக்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டது. இன்று காலை அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்றது.
சின்னத்திரை சிரிப்பு நடிகர் புகழை காண ஏராளமான இளைஞர்கள் அந்த கடை முன்பாக கூடியிருந்தனர். வெப்சைட்டை துவக்கி வைத்து விட்டு வெளியே வந்து நடிகர் புகழ், காரில் ஏறிய போது கொரோனா பயத்தையும் மீறி அவருடன் இளைஞர்கள் செல்ஃபி எடுக்க முயன்றனர். இதனால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் முக கவசம் அணியாமல் கும்பலாக கூடியிருந்த கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு, லேசாக தடியடி நடத்தி விரட்டி அடித்தனர்.
இதனால் அந்த பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் கொரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக சம்பந்தப்பட்ட தனியார் செல்போன் கடையை நெல்லை மாநகராட்சி அலுவலர்கள் மூடி சீல் வைத்தனர். நோய் பரப்பும் விதமாக அதிகளவு கூட்டம் கூட்டுதல், சமூக இடைவெளி கடைபிடிக்காதது, வாடிக்கையாளர்கள் முக கவசம் அணியாதது ஆகிய காரணங்களுக்காக இன்று முதல் வரும் 16ம் தேதி வரை மூன்று நாட்கள் கடையை மூடி வைப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரபல சின்னத்திரை காமெடி நடிகர் நேரில் வந்து திறந்து வைத்த செல்போன் கடை மாநகராட்சி அதிகாரிகளால் மூடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu