கிறிஸ்தவர்கள் புனித தவக்காலத்தை முன்னிட்டு சிலுவை பயணம்
கிறிஸ்தவர்கள் புனித தவக்காலத்தை முன்னிட்டு, நெல்லை சவேரியார் ஆலயத்தில் இருந்து கிறிஸ்து அரசர் ஆலயம் வரை இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகள் குறித்து ஜெபம் செய்தவாறு தவக்கால சிலுவை பயணம் மேற்கொண்டனர். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாள்களை தவக்காலமாக கடைப்பிடிக்கின்றனர். இந்த நாள்களில் கிறிஸ்தவர்கள் ஆடம்பர நிகழ்வுகளை தவிர்த்து ஜெபம், தவம், தர்மம் போன்றவைகளை அனுசரிக்கின்றனர். அந்த வகையில், இந்தாண்டு கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் கடந்த 2ம் தேதி சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
இதையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களில் சிறப்பு ஆராதனையும், திருப்பலியும் நடைபெற்றது. சிஎஸ்ஐ உள்ளிட்ட மற்ற சபைகளில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளை தியானிக்கும் வகையில் தேவாலயங்களில் தவக்கால சிலுவை பயணம் மேற்கொள்ளப்படும்.
அதன்படி நெல்லை பாளையங்கோட்டை சவேரியார் ஆலயத்தில் இருந்து தவக்கால சிலுவை பயணமானது தொடங்கி பாளையங்கோட்டை மறை மாவட்டத்தின் முதன்மை குரு பேரருட்தந்தை குழந்தை ராஜ் அடிகளார் மற்றும் பங்கு பிரதிநிதிகள் சிலுவையை சுமந்தபடி முன் செல்ல அவர்களை தொடர்ந்து சிலுவையை தாங்கி சிலுவை பாடுகளை நினைவு கூர்ந்து ஜெபம் செய்தவாறு கிறிஸ்தவர்கள் பேரணியாக சென்றனர். இந்த நடைபயணம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வழியாக திரு இருதய சகோதரர்களின் இல்லத்தில் உள்ள கிறிஸ்து அரசர் ஆலயத்தில் நிறைவு பெற்றது. இதில் திரளான கிறிஸ்த்தவ பெருமக்கள் கலந்து கொண்டனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu