திரிபுராந்தீஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா: 63 நாயன்மார்கள் திருவீதி உலா

திரிபுராந்தீஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா: 63 நாயன்மார்கள் திருவீதி உலா
X

நெல்லை திரிபுராந்தீஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை திருவிழாவில் 63 நாயன்மார்கள் வீதியுலா. 

நெல்லை திரிபுராந்தீஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை திருவிழாவில் 63 நாயன்மார்கள் வீதியுலா நடைபெற்றது.

திருநெல்வேலி மாநாில் பாளையங்கோட்டை நகரத்தின் மையப்பகுதியில் அமைந்து உள்ளது. அருள்தரும் கோமதி அம்பாள் சமேத அருள்மிகு திரிபுராந்தீசுவரர் திருக்கோயில். பழமையும், பெருமையும் கொண்ட திருக்கோவில் கடன் நிவர்த்தி ஸ்தலமாக விளங்குகிறது.

இந்த கோவிலில் நடைபெறுகின்ற விழாக்களின் சித்திரை திருவிழா சிறப்பு பெற்றதாகும். இதற்கான கொடியேற்றம் கடந்த 8 ம் தேதி தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் சுவாமி அம்பாளுக்கு காலையில் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், இரவில் பல்வேறு வாகனங்களில் வீதி உலாவும் நடைபெற்றது.

6-ம் திருவிழாவான இன்று காலை சுவாமி, அம்பாள் மற்றும் 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மாலை சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும், பஞ்ச மூர்த்திகள் மற்றும் 63 நாயன்மார்கள் மேளதாளங்கள், பஞ்சவாத்தியங்கள் முழங்க சிவனடியார்கள் திருமுறைபாடி, பெண்கள் கோலாட்டம் ஆடியபடி 8 ரதவீதிகளில் வீதிஉலா நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தமிழகத்தில் சென்னை, மைலாப்பூர், கபாலீஸ்வரர் திருக்கோயிலுக்கு அடுத்த படியாக 63 நாயன்மார்கள் வீதியுலா நெல்லையில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் திருச்சிற்றம்பல வழிபாட்டு அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil