பாரதி நூற்றாண்டு நிகழ்ச்சியில் 100 கவிஞர்களுக்கு "பாரதி பைந்தமிழ்ச் சுடர்" விருது
நெல்லை அருங்காட்சியகத்தில் நடந்த பாரதி நூற்றாண்டு நிகழ்ச்சியில் 100 கவிஞர்களுக்கு " பாரதி பைந்தமிழ்ச் சுடர் " விருது வழங்கப்பட்டது.
நெல்லை அருங்காட்சியகமும், பொதிகைத் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்திய, பாரதி நினைவு நூற்றாண்டு நிகழ்ச்சியில் நூறு கவிஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர்.பேரா தலைமை தாங்கினார். செயலாளர் பாப்பாக்குடி முருகன் வரவேற்புரை வழங்கினார்.
முதலில், 'நூறாண்டு கடந்தும் பாவாண்டு நிற்கிறார் பாரதி' என்ற தலைப்பில் நடந்த கவியரங்கிற்கு, ஊடகவியலாளர் கவிஞர் ஜான் தன்ராஜ் தலைமைக் கவிஞராய் இருந்து கவியரங்கினை நடத்தினார். கவிஞர் வத்திராயிருப்பு கவுதமன், முனைவர் இராஜ மதிவாணன், வழக்கறிஞர் பிரபாகர், முனைவர் கவிதா, ஆசிரியை ரோஸ்லின் ஆகியோர் கவிதை வாசித்தனர்.
திருச்செங்கோடு விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மாணவி ஹரிசுவேதா எழுதிய 'பாரதியின் பத்துக் கட்டளைகள்' என்ற நூல் வெளியிடப்பட்டது. நூலை, கவிஞர் பேரா வெளியிட, மருத்துவர் பிரேமச்சந்திரன் முதல் நூலைப் பெற்றுக் கொண்டார். அடுத்து பொதிகைத் தமிழ்ச் சங்கம் நடத்திய உலகளாவிய கவிதைப் போட்டியில் தேர்வான நூறு கவிஞர்களுக்கு "பாரதி பைந்தமிழ்ச் சுடர் "என்ற விருது வழங்கப்பட்டது. விருதினை அருங்காட்சியக மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி வழங்கினார்.
சென்னை, திருச்சி, கோவை.சேலம், புதுக் கோட்டை, இராமநாதபுரம், மதுரை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உட்பட தமிழகத்திலுள்ள கவிஞர்கள் மற்றும் புதுச்சேரி, கொச்சி ஆகிய பகுதிகளில் இருந்தும் வந்திருந்த நூறு கவிஞர்களும் இந்த விருதை பெற்றுக் கொண்டனர். விருது பெற்ற கவிஞர்கள் சிறப்புப் பேருந்து மூலம் எட்டையபுரம் சென்று பாரதி பிறந்த இல்லம் மற்றும் மணி மண்டத்தில் நினைவஞ்சலி செலுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu