திருநெல்வேலியில் உலக காசநோய் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி

திருநெல்வேலியில் உலக காசநோய் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி
X

நெல்லையில் உலக காசநோய் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைக்கப்பட்டது.

திருநெல்வேலியில் உலக காசநோய் தினத்தையொட்டி காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

திருநெல்வேலி மாவட்டம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு, மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜு ஆகியோர் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.

மேலும் காசநோய் விழிப்புணர்வு உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அனைவரும் எடுத்துக்கொண்டார்கள். அதனைத் தொடர்ந்து காசநோய் பிரிவில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக 5 பணியாளர்களுக்கு பாராட்டுகளையும், கேடயங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு பேசும்போது

உலக காசநோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 24 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதனை 1882ம் வருடம் டாக்டர் ராபர்ட் காக் எனும் அறிவியலாளர் காசநோய் என்பது ஒரு வகையான நோய்க்கிருமியால் ஏற்படுகிறது என்றும் அது பரவக்கூடிய தன்மை உடையது என்றும் கண்டறிந்து உலகிற்கு அறிவித்தார். 2020 ஆம் ஆண்டு அறிக்கையின் படி உலகளவில் 1 கோடி பேர் காசநோயால் பாதிக்கப்பட்டு அவர்களில் 15 இலட்சம் பேர் இறந்துள்ளனர். உலகளவில் காசநோய் இரண்டாவது பெரிய உயிர்க்கொல்லியாக அறியப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு 26 இலட்சத்து நாற்பதாயிரம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டும், 4,45,000 பேரும் இறக்கின்றனர். காசநோய் சாதாரண மக்களைக் காட்டிலும் HIV பாதித்தவர்களுக்கு 18 மடங்கு வரும் வாய்ப்பு அதிகமாகும். மேலும் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் காசநோய் பாதிப்பதற்கான வாய்ப்பு மிகவும் அதிகமாகும். காசநோய் என்பது Mycobacterium Tuberculosis எனும் நுண்ணுயிரிக் கிருமியால் காற்றின் மூலமாக பரவக்கூடியதாகும், 2 வாரங்களுக்கு மேற்பட்ட இருமல், சளி, மாலை நேரக் காய்ச்சல் எடை குறைதல், பசியின்மை, சளியில் இரத்தம் வருதல் காசநோயின் அறிகுறியாகும். நமது நாட்டில் தேசிய காசநோய் தடுப்புத்திட்டம் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. 100 சதவீதம் இலவச மற்றும் தரமான சிகிச்சை காசநோயாளிக்கு மிக அருகில் கிடைக்கப்பெறுகிறது. புதிய மற்றும் நவீன காசநோய்கான Bedaquiline, Delamanid போன்ற மருந்துகள் அனைத்து மாவட்டங்களிலும் கிடைக்கப் பெறுகிறது. அதிநவீன காசநோய் கண்டறியும் கருவிகளான CBNAAT, TRUNAAT, LPA அனைத்து மருத்துவமனைகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கிடைக்கப்பெறுகிறது. அரிகுறி உள்ளவர்கள் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவிச்சந்திரன், இணை இயக்குநர் மருத்துவ சுகாதாரப்பணிகள் ஜான்பிரிட்டோ, துணை இயக்குநர் மருத்துவப்பணிகள் (காசநோய்) எஸ்.வெள்ளச்சாமி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள், மாணவ,மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு