அதிமுக உடன் கூட்டணி இல்லை. பாஜக கூட்டணியில் தொடர்கிறோம்:தமமுக தலைவர் ஜான்பாண்டியன்
அதிமுகவால் தேர்தல் நேரத்தில் பழிவாங்கபட்டதாகவும், கடந்த சட்டமன்ற தேர்தலில் மாவட்டத்தில் கேட்ட தொகுதி அதிமுக தலைமை தராமல் சென்னை எழும்பூர் தொகுதியை தந்து திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டதாகவும், தற்போது அதிமுகவுடனான கூட்டணியில் நாங்கள் இல்லை எனவும் நெல்லையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தென்மண்டல தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் தலைவர் ஜான்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசிற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது, பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க மத்திய அரசு தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டு மாதங்களில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் கட்சி சார்பில் வாய்ப்புள்ள இடங்களில் போட்டியிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் கூறியதாவது:- மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு எடுத்துவரும் நடவடிக்கை கண்டனத்துக்குரியது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிறித்தவ மதத்தில் உள்ள தேவேந்திரகுல வேளாளர் சாதிச் சான்றி பெறுவதில் உள்ள சிக்கலை தீர்க்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவேந்திரகுல வேளாளர் அரசானை அறிவிப்பு கரணமாக கடந்த சட்டமன்ற தேர்தலில் 80% அதிகமான தேவேந்திர குல வேளாளர் மக்கள் அதிமுக, பாஜக கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர்.
நான் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தென்மாவட்டத்தில் தொகுதிகள் கேட்டும் கொடுக்காமல் பழிவாங்கும் நோக்கத்தோடு வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு சென்னை, எழும்பூர் தொகுதியில் போட்டியிட வைத்தார்கள். நான் அதிமுகவால் தேர்தல் நேரத்தில் பழிவாங்கும் நடவடிக்கைக்கு ஆளாக்கப்பட்டு திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார்.
தேவேந்திரகுல வேளாளர் என அரசானை கொடுத்த காரணத்தற்காக நன்றியுணர்வுடன் இருந்ததால் கூட்டணியில் இருந்து வெளியேறாமல் கொடுத்த தொகுதியில் போட்டியிட்டேன். அதிமுக, பாஜக வெற்றி பெற தேவேந்திர குல வேளாளர் மக்கள் காரணம். அதே போன்று நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் ரவீந்திரநாத் வெற்றிபெறவும், கடந்த சட்டமன்ற தேர்தலில் ஓ பன்னீர்செல்வம் வெற்றி பெறவும் தேவேந்திரகுல வேளாளர் மக்களே காரணம் என்றும் தெரிவித்தார். தென் மாவட்டங்களில் திட்டமிட்டு தன்னை தேர்தல் பரப்புரை செய்ய விடவில்லை. தற்போதைய நிலையில் அதிமுகவுடன் உறவு மட்டுமே உள்ளது. கூட்டணியில் இல்லை. பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வதாக தெரிவித்தார். அதிமுகவின் இரண்டு தலைமையால் அக்கட்சி அழிவை நோக்கி செல்கிறது. 21ஆம் தேதி டெல்லியில் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்திக்க நேரம் கேட்டு இருப்பதாகவும், அப்போது மேகதாது விவகாரம் குறித்து பிரதமருடன் பேசுவேன் என்று தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu