நெல்லையில் சாலையோரம் மிதிவண்டிக்கு தனி பாதை அமைக்கும் பணி: ஆட்சியர் தொடக்கம்
நெல்லையில் சாலையோரம் மிதிவண்டிக்கு தனி பாதை அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.
நெல்லை மாநகராட்சியில் மத்திய அரசின் சீர்மிகு நகர் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் மேலப்பாளையம் மண்டலத்துக்கு உள்பட்ட என்ஜிஓ காலனி பெரியகுளம் சாலையில் இத்திட்டத்தின் கீழ் சாலையோரம் ரூ. 2 .84 கோடி மதிப்பில் பெரியகுளம் சாலையில் தொடங்கி மொத்தம் 1800 மீட்டர் தொலைவுக்கு பிரத்யேக மிதிவண்டி பாதை அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன் ஆகியோர் தொடக்கி வைத்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு செய்தியாளர்களிடம் கூறியதாவது: நெல்லை மாநகரில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தற்போது மிதிவண்டி பாதை அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது. தாமிரபரணி ஆற்றை பசுமையாக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிப்பதற்காக தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகிறோம்.
பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் 70 சதவீத பணிகள் முடிவு பெற்றுள்ளது. அதேபோல் புதிய பேருந்து நிலையத்தில் இரண்டடுக்கு வாகன பாதுகாப்பு மையம் அமைக்கும் பணியும் முடிவடையும் தருவாயில் உள்ளது. இன்னும் மூன்று மாதங்களுக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
தாமிரவருணி ஆற்றில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் வாகனங்கள் உள்ளே செல்லாமல் தடுக்க ஆற்றில் ஆங்காங்கே குழிகள் தோண்டப்பட்டு உள்ளது. இருப்பினும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டால் தான் ஆற்றை பாதுகாக்க முடியும்.
இதற்காக பாபநாசத்தில் இருந்து மாநகராட்சி வரை உள்ள அனைத்து கிராமங்களிலும் மாபெரும் விழிப்புணர்வு இயக்கத்தை நடத்த உள்ளோம். இதை ஒரு மக்கள் இயக்கமாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரும் வெள்ளிக்கிழமை இது தொடர்பான முதல்கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது என்றார் ஆட்சியர். இந்நிகழ்வில், பாளையங் கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் ஆகியோர் உடனிருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu