நெல்லை கங்கைகொண்டானில் மினி டைடல் பார்க்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
நெல்லை கங்கைகொண்டான் தொழில்நுட்ப பூங்காவை மையப்படுத்தி மினி டைடல் பார்க் அமைக்கப்படும் என்றார் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு.
நெல்லை, தூத்துக்குடி மாவட்ட தொழில் வளர்ச்சிக்கான ஆய்வுக் கூட்டம் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது.
இதில் தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு கலந்து கொண்டு மாவட்டத்தில் தொழில் தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தும் , நாங்குநேரி , கங்கைகொண்டான் தொழில்நுட்ப பூங்கா வளர்ச்சிப் பணிகள் குறித்தும் இரண்டு மாவட்ட வர்த்தக நிறுவனத்தினர், தொழில் முனைவோர்கள் , வர்த்தக சபை தலைவர்கள் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் தங்கம்தென்னரசு மேலும் கூறியதாவது:
நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தை முன்னிலைப்படுத்தி நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் திட்டங்கள் முன்னெடுக்கப்படும், புதிய தொழில் தொடங்குவதற்கு ஒற்றை சாரளமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதில் முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. இனிமேல் தொழில் எளிதாக தொடங்கும் வகையில் இந்த முறை சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக தொழில் முதலீட்டாளர் மாநாட்டை தென்மாவட்டங்களில் நடத்த முதல்வருடன் ஆலோசனை நடத்தி ஏற்பாடு செய்யப்படும். 2020-21 ஆண்டு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சிறப்பான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நெல்லை கங்கைகொண்டான் தொழில்நுட்ப பூங்காவை மையப்படுத்தி மினி டைடல் பார்க் அமைக்கப்படும். தடுப்பூசியை தமிழகத்திலேயே தயாரிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் எண்ணமாகும். செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி தயாரிக்க அனுமதி அளிப்பது மத்திய அரசின் கையில் உள்ளது.
தமிழக முதல்வர் பிரதமரை நேரில் சென்று தடுப்பூசி மையம் தொடர்பாக வலியுறுத்தியுள்ளார். தடுப்பூசி தயாரிப்பது தொடர்பாக மத்திய அரசின் முடிவை பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கான அனுமதி மட்டுமே வழங்கப்பட்டு அந்த பணிகள் மட்டும் நடந்து வருகிறது. தமிழகத்தின் முதன் முதலாக தொடங்கப்பட்ட நூற்பாலையில் ஆய்வு நடத்தப்பட்டு புதிய தொழில் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் அமைச்சர் தங்கம் தென்னரசு.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu