மருந்து வாங்க குவிந்த மக்கள்...

ரெம்டெசிவர் மருந்து

நெல்லையில் ரெம்டெசிவர் மருந்து வாங்க குவிந்த மக்கள் ;

தமிழகத்தில் கொரனா இரண்டாம் கட்ட அலையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் கொரனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ரெம்டெசிவர் மருந்து விற்பனையை அதிகரிக்க அரசு திட்டமிட்டது

முன்னதாக தலைநகர் சென்னையில் மட்டுமே தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் இந்த ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது பின்னர் சென்னையை தவிர்த்து மதுரை திருச்சி சேலம் கோவை திருநெல்வேலி ஆகிய ஐந்து மாவட்டங்களில் கடந்த சனிக்கிழமை முதல் ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது

அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் வைத்து ரெம்டெசிவர் மருந்து விற்பனை நடைபெறுகிறது

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் மருந்து வழங்கப்படவில்லை இதையடுத்து இன்று மருந்து வாங்க காலை முதலே நோயாளிகளின் உறவினர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர் முன்னெச்சரிக்கையாக நுழைவு வாசலில் பாதுகாப்புக்கு போலீசார் நிறுத்தப்பட்டு உரிய சோதனைக்கு பின்னரே மருந்து வாங்க வரும் நபர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்

மொத்தம் ஆறு டோஸ் அடங்கிய தொகுப்பு 9408 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 50 நோயாளிகளுக்கு தலா 6 டோஸ் என மொத்தம் 300 டோஸ்கள் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை நெல்லையில் 26 நோயாளிகள் மட்டுமே மருந்து வாங்கியுள்ளனர். எனவே அதில் மீதி இருந்த 144 டோஸ்யையும் சேர்த்து இன்று மொத்தம் 444 டோஸ் 74 நோயாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. ரெம்டெசிவர் மருந்து வாங்க வருபவர்கள், நோயாளியின் கொரனா பரிசோதனை சென்று சிடி ஸ்கேன் பரிசோதனை சான்று, மருத்துவரின் பரிந்துரை சான்று அசல், நோயாளியின் ஆதார் அட்டை அசல் மற்றும் நகல் மருந்து வாங்க வரும் நபரின் ஆதார் அட்டையின் நகல் மற்றும் அசல் ஆகிய ஆறு ஆவணங்களை எடுத்து வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது

அதன்படி உரிய ஆவணங்களுடன் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று மருந்து வாங்கிச் சென்றனர் இதற்கிடையில் பெரும்பாலான நோயாளிகளுக்கு பாதிப்பு குறைந்த அளவில் இருப்பதால் அவர்களுக்கு மருந்து தேவை இல்லை என்று திருப்பி அனுப்பி விடுகின்றனர்

அதாவது நோயாளிகள் உறவினர்கள் கொண்டுவரும் மருத்துவரின் பரிந்துரை சான்றை மருந்து விற்பனை மையத்தில் உள்ள மருத்துவர் பரிசோதித்து அதன் பிறகே மருந்து வழங்கப்படுகிறது அந்த சான்றில் லேசான பாதிப்பு என்று குறிப்பிட்டிருந்தால் அவர்களுக்கு இந்த மருந்து தேவையில்லை என்று திருப்பி அனுப்பி விடுகின்றனர்

இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்த பலர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர் குறிப்பாக தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு வந்தால் மட்டுமே ரெம்டெசிவர் மருந்து வழங்கப்படுகிறது அதாவது தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளின் உறவினர்கள் வாங்கி வரும் மருந்தில் சில டோஸ்களை மட்டுமே பயன்படுத்தி விட்டு மீதி டோஸ்களை அவர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது

இருப்பினும் தேவைப்படும் அளவுக்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று டோஸ்கள் மட்டுமாவது வழங்கினால் அதற்குரிய தொகையை கொடுத்து விடுகிறோம் என்று பொதுமக்கள் அங்கிருந்த ஊழியர்களிடம் கெஞ்சி பார்த்தனர்

ஆனால் வழங்கினால் மொத்தமாக ஆறு டோஸ் தான் வழங்குவோம் அதுவும் பாதிப்பு அதிக அளவில் இருந்தால் மட்டும்தான் வழங்கும் என்று ஊழியர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர் இதையடுத்து லேசான பாதிப்பு உள்ள நோயாளிகளின் உறவினர்கள் மருந்து கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!