நெல்லை-தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாமிரபரணி ஆற்றில் தீயணைப்பு வீரர்கள் மீட்பு ஒத்திகை நடைபெற்றது

நெல்லை-தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாமிரபரணி ஆற்றில் தீயணைப்பு வீரர்கள் மீட்பு ஒத்திகை நடைபெற்றது
X

 தீயணைப்பு வீரர்கள் மீட்பு ஒத்திகை.

தென்மேற்கு பருவ மழையை முன்னிட்டு நெல்லை தாமிரபரணி ஆற்றில் தீயணைப்பு வீரர்கள் வெள்ள மீட்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். மீட்பு உபகரணங்கள் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆண்டுதோறும் பருவ மழை நேரங்களில் தீயணைப்புத் துறையினர் வெள்ள மீட்பு ஒத்திகையில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் நெல்லை மாவட்டத்தில் தீயணைப்பு வீரர்கள் இன்று வெள்ள மீட்பு ஒத்திகை பணியில் ஈடுபட்டனர். அதன்படி வண்ணாரப்பேட்டை தாமிரபரணி ஆற்றில் நடைபெற்ற இந்த வெள்ள மீட்பு ஒத்திகையில் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட வீரர்கள், அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறையினர் பங்கேற்றனர்.

அப்போது அவர்கள் ஆற்றின் நடுவே சில வீரர்களை நிற்க வைத்து வெள்ளத்தின் போது தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கும் பொதுமக்களை ரப்பர் படகு மூலம் விரைந்து சென்று மீட்பது தொடர்பாகவும், கயிறு கட்டி பொதுமக்களை மீட்டு பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து வருவது தொடர்பாகவும், ஒத்திகை செய்து காண்பித்தனர். மேலும் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வெள்ளத்தில் இருந்து மீட்பது குறித்தும் ஒத்திகை நடத்தினர்.

அதேபோல் தீயணைப்பு துறையினர் வரும் வரை காத்திருக்காமல் காலி குடங்கள், பிளாஸ்டிக் கேன்கள் போன்ற வீட்டில் உள்ள தேவையில்லதா பொருட்களை வைத்து கூட எளிதில் பொதுமக்கள் தங்களைத் தாங்களே வெள்ளத்திலிருந்து மீட்டுக் கொள்ளலாம், என்பதை தெளிவுபடுத்தும் வகையில் ஒத்திகை செய்து காண்பித்தனர்.

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி