முதியோர் தின விழாவில் நீதிபதி பங்கேற்று வேண்டுகோள்
திருநெல்வேலி மாவட்டம் கடம்போடு ஊராட்சியில் நடந்த முதியோர் தின விழாவில் நீதிபதி பங்கேற்று முதியோர்களுக்கு பொன்னாடை போர்த்தினார்.
Older Persons Day -சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் நடைபெற்ற முதியோர் தின விழாவில் மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிபதி தி.பன்னீர் செல்வம் முதியோர்களுக்கு பொன்னாடை அணிவித்து, பரிசுகள் வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகா கடம்போடுவாழ்வு ஊராட்சியில் ஜெயின் ஜோசப் கல்வியியல் கல்லூரியில் சர்வேதேச முதியோர் தின விழா நடைபெற்றது. விழாவில் மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிபதி தி.பன்னீர் செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் ஒழுங்கு நடவடிக்கை சுகன்யா முன்னிலையில் முதியோர்களுக்கு பொன்னாடை போர்த்தி, பரிசுகள், நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
மேலும் நாங்குநேரி சட்ட மன்ற தொகுதியில் உள்ள 80 வயதுக்கு மேற்பட்ட மூன்று மூத்த வாக்களார்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.இதனைத் தொடர்ந்து பேசும்போது:-
குடும்பம் என்பது ஒரு அமைப்பு. குடும்பத்தோடு வாழும் போது பல நல்ல விஷயங்கள் ஒருவருக்கொருவர் அறிந்து, நாம் குடும்பமாக வாழ்கிறோம். இப்போது நவீனமயமாதல் காலத்தினால் கூட்டுக்குடும்பம் என்பது இல்லாத நிலை உள்ளது. கூட்டுக்குடும்பமாக வாழும்போது மூத்தோர் சொல்லிற்கு மரியாதை கொடுத்து வாழ்ந்து வந்தனர். இதனால் அம்மா, அப்பாவுக்கு மரியாதை கொடுத்து வாழ்ந்து வந்தனர். கூட்டுக் குடும்பங்கள் தற்சமயம் குறைந்து விட்டதால் பெரியவர்களுக்கும், அம்மா, அப்பாகளுக்கும் மரியாதை இல்லாத சூழ்நிலை உள்ளது. நாகரிக வளர்ச்சிகளை நம்பி நாம் குடும்பத்தை இழந்து வருகிறோம். மூத்தோர் சொல் அமிர்தம் என்ற நிலை மாறி நாம் மூத்தோர்களின் சொல்லிற்கு மரியாதை குடுக்காத நிலை உருவாகி உள்ளது. ஒரு தாய், தந்தை பத்துக்கும் மேற்பட்ட பிள்ளைகளை பெற்று சிறப்பாக வளர்த்து வாழ்ந்து வந்த காலங்கள் உண்டு. இந்த கால கட்டங்களில் தாய், தந்தையரை பத்து பிள்ளைகளும் சேர்ந்து கவனித்து பார்க்க முடியாத காலம் உருவாகி உள்ளது. எப்போதுமே நம் மூத்தோர்களுக்கு மரியாதை கொடுத்து பெற்றோர்களை பாதுகாக்க வேண்டும். பச்சமரம் தான் நாளை பழுத்த மரமாகும். அது போன்று இளையவர்கள் நாளை முதியவர்கள் ஆகும் காலம் உள்ளது. எல்லோருக்கும் இந்த நிலமை ஏற்படும் என்ற மன நிலை உங்களுக்கும் இருந்தால் நீங்கள் பெற்றோர்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்பும் நிலை ஏற்படாது. வாழ்க்கை அரிதானது, அதை குடும்பத்தோடு வாழ்ந்து, குடும்பம் ஒரு கோவில் என்பதை நிரூபிக்க வேண்டும். குடும்ப உறவுகளுக்கு நாம் அனைவரும் மதிப்பளித்தால் முதியோர் இல்லம் இல்லாத சூழ்நிலை உருவாக்க முடியும். மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டம் உள்ளது. பெற்றோர்கள் மற்றும் முதியோர்களுக்கு ஏதாவது இழப்புகள், கஷ்டங்கள் ஏற்படும் போது இந்த சட்டத்தின் மூலம், மூத்த குடிமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வழிவகை உள்ளது. முதியோர்களுக்கு ஏதாவது பிரச்சினை, குறைகள் இருந்ததால் நீதிமன்றத்தையோ, சட்டஆலோசனைகள் மையங்கள், சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட நிர்வாகத்தையோ அனுகலாம். அனைவரும் ஒற்றுமையுடன் குடும்பத்துடன் வாழ்ந்து முதியோர்களை பாதுகாப்போம் என உறுதி ஏற்போம்.
இவ்வாறு கூடுதல் மாவட்ட நீதிபதி தி.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சமூக நல அலுவலர் தனலெட்சுமி, நாங்குநேரி வட்டாட்சியர் இசக்கி பாண்டி, ஒன் ஸ்டாப் சென்டர் பொறுப்பாளர் பொன்னுமுத்து, கல்லூரி தாளாளர் தமிழ்செல்வன், கள்ளிக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீரங்க ராமகிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள், முதியோர்கள் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu