11ம் வகுப்பு மாணவிக்கு அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது

11ம் வகுப்பு  மாணவிக்கு அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது
X
11ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இதற்கு காரணமான இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த மாணவி பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்த கிராமத்தில் நடந்த கோவில் கொடை விழாவிற்கு சவுண்ட் சர்வீஸ் வேலை செய்வதற்காக பணகுடியை சேர்ந்த இசக்கியப்பன் என்ற மஸ்தான் என்பவர் வந்துள்ளார். அந்த கிராமத்தில் மூன்று நாட்கள் தங்கியிருந்து சவுண்ட் சர்வீஸ் பணியை கவனித்து வந்துள்ளார். அப்போது அந்த மாணவிக்கும், இசக்கியப்பனுக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பின் காரணமாக அந்த மாணவி இசக்கியப்பனுக்கு பணம் மற்றும் தங்க நகைகள் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நாளடைவில் மாணவிக்கும், இசக்கியப்பனுக்கும் இடையே நெருக்கம் அதிகமானதாகவும், அவர்கள் தனிமையில் சந்தித்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு அந்த மாணவிக்கு வயிறுவலி ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாணவியின் பெற்றோர் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது சோதித்துப் பார்த்த மருத்துவர்கள் மாணவியின் வயிற்றில் நீர்க்குமிழிகள் இருப்பதாகவும், வேறு ஒன்றும் பிரச்சினை இல்லை எனவும் கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மாணவிக்கு மீண்டும் வயிறு வலி ஏற்படவே நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அவரது பெற்றோர்கள் சேர்த்துள்ளனர். அங்கு சோதித்துப் பார்த்த மருத்துவர்கள் மாணவி கர்ப்பம் அடைந்திருப்பது தெரியவந்தது. பின்பு சிறிது நேரத்தில் மாணவிக்கு சுகப்பிரசவம் ஏற்பட்டு பெண் குழந்தை பிறந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் மருத்துவர்கள் நான்குநேரி மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். நான்குநேரி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அந்த மாணவியிடம் விசாரணை நடத்தினர். அதில் இசக்கியப்பன் என்பவருடன் ஏற்பட்ட நட்பினால் தான் இதுபோன்ற நடந்ததாக மாணவி கூறியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று தனிப்பிரிவு போலீசார் பணகுடியில் வைத்து இசக்கியப்பனை கைது செய்து நாங்குநேரிக்கு அழைத்துச் சென்றனர். அவரை போஸ்கோ சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!