உதவி ஆய்வாளரை வெட்ட முயன்ற நான்கு பேர் கைது

உதவி ஆய்வாளரை வெட்ட முயன்ற நான்கு பேர் கைது
X
நெல்லை மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளரை வெட்ட முயன்ற நான்கு பேர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை அருகே வாகன சோதனையின் போது காவல் உதவி ஆய்வாளரை வாளால் வெட்ட முயன்ற 4 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா, வாள் பறிமுதல் செய்யப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களை தடுக்கும் வகையில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி நேற்று முன்தினம் பாளையங்கோட்டை தாலுகா காவல் உதவி ஆய்வாளர் பிரித்விராஜ் தலைமையில் பாளையங்கோட்டை- சீவலப்பேரி ரோட்டில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த வாலிபர்கள் 4 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பிச்செல்ல முயன்றனர். இதனை பார்த்த உதவி ஆய்வாளர் பிரித்விராஜ் உடனடியாக அவர்களை மடக்கி பிடிக்க முயன்றார். அப்போது அந்த வாலிபர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த வாளை எடுத்து உதவி ஆய்வாளரை வெட்ட முயன்றனர்.

இதனை பார்த்து நொடிப்பொழுதில் சுதாரித்துக்கொண்ட உதவி ஆய்வாளர் பிரித்விராஜ் அங்கிருந்து சற்று தள்ளிச் சென்றார். இதனால் அவர் உயிர் தப்பினார். இதனையடுத்து அங்கு பணியில் இருந்த காவல் துறையினர் உடனடியாக 4 வாலிபர்களையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர்கள் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த சூரியா மகன் தினேஷ் (21), கடல்கண்ணன் மகன் ஆனந்தன் (20), சம்பத் மகன் குணா (20), நெல்லை டவுன் பகுதியை சேர்ந்த கவியரசன் (20) என்பதும், அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்து இருந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 230 கிராம் கஞ்சா, வாள், இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

காஞ்சிபுரத்தை சேர்ந்தவர்கள் எப்படி இங்கு வந்தார்கள்? அவர்களுக்கு நெல்லை டவுனை சேர்ந்த கவியரசனுடன் எப்படி பழக்கம் ஏற்பட்டது? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வாகன சோதனையில் காவல் உதவி ஆய்வாளரை வாளால் வாலிபர்கள் வெட்ட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!