கூந்தன்குளத்தில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்: சரணாலயத்தை மேம்படுத்த கோரிக்கை
கூந்தன்குளத்தில் குவிந்துள்ள வெளிநாட்டு பறவைகள் கூடுகட்டி குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்து வருகிறன்றன.
கூந்தன்குளத்தில் குவிந்துள்ள வெளிநாட்டு பறவைகள் தேவையான உணவு, குடிநீர் கிடைப்பதால் கடந்த விட கூடுதல் பறவைகள் கூடுகட்டி குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்து வருகிறது. இது பற்றிய ஒரு தொகுப்பு.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ளது கூந்தன்குளம் கிராமம். திருநெல்வேலியில் இருந்து 33 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் வந்து தங்கி முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து செல்கிறது. இந்த கூந்தன்குளம் 1994ஆம் ஆண்டு முதல் பறவைகள் சரணாலயமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. 129.33 ஏக்கர் நிலப்பரப்பில் கூந்தன்குளம், காடன் குளம், கன்னங்குளம், சிலையம் ஆகிய பகுதி குளங்களை இணைத்து கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் அமைக்கப்பட்டது. சைபீரியா, ஐரோப்பிய நாடுகள், மியான்மர், இலங்கை, பாகிஸ்தான் என ஏராளமான வெளிநாடுகளிலிருந்து கூந்தன் குளத்திற்கு ஆண்டுதோறும் பறவைகள் வந்து செல்கின்றன.
டிசம்பர் மாதம் மற்றும் ஜனவரி மாதத்தில் வெளிநாடுகளில் இருந்து பறவைகள் வந்து கூடு கட்ட துவங்கும் நிலையில் முட்டையிட்டு குஞ்சு பொரித்து குஞ்சு ஓரளவு வளர்ந்ததும் மார்ச் ஏப்ரல் மாதங்களில் இங்கு இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்கிறது. நாற்பத்தி மூன்று வகை இனத்தைச் சேர்ந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் ஆண்டுதோறும் இங்கு வந்து முட்டையிட்டு குஞ்சு பொரித்து செல்கிறது. முட்டையிட்டு குஞ்சு பொரித்து செல்வதற்கு தேவையான சீதோஷ்ண நிலை மணிமுத்தாறு அணையிலிருந்து திறக்கப்படும் நீர் கூந்தன்குளத்தில் உள்ள குளங்களில் உள்ள மீன்கள் ஆகியவை பறவைகள் வர காரணமாக அமைகின்றது.
சைபீரியா நாட்டில் இருந்து பட்டைத்தலை வாத்து, ஊசிவால் வாத்து, தட்டை வாயன், செண்டு வாத்து, முக்குளிப்பான் போன்ற நாரை வகைகளும், ரஷ்யா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து வெள்ளை அரிவாள், மூக்கன், டால் மிஷன், பெலிக்கன் பறவைகள், பாம்பு தாரா, செங்கால் நாரை, மூக்கு நாரை, கரண்டிவாயன் என நாற்பத்தி மூன்று வகையான பறவைகள் இங்கு வந்து செல்கிறது. வனத்துறையினரின் பாதுகாப்பும், உள்ளூர் மக்கள் இந்த பறவைகளுக்கு எவ்வித இடையூறும் செய்யாதும் இங்கு ஆண்டுதோறும் பறவைகள் வருவது அதிகரிக்க காரணமாக அமைகிறது. கடந்த ஆண்டு பெய்த மழை காரணமாக அங்குள்ள குளங்களில் நீர் நிரம்பி காணப்பட்டது. தற்போது வெயில் காலம் துவங்கி உள்ள நிலையிலும் ஓரளவு தண்ணீர் இருப்பு உள்ளது. அதோடு மணிமுத்தாறு அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரும் குளங்களில் உள்ளதால் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டில் வெளிநாட்டு பறவைகள் வரத்து மட்டுமல்லாது, உள்நாட்டில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பறவைகள் வந்து கூடு கட்டி குஞ்சு பொறித்துள்ளது. இன்னும் சில நாட்களில் பறவைகள் தங்கள் சொந்த நாடுகளுக்கு மற்றும் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப உள்ள நிலையில் கடந்த ஆண்டுகளை விட பறவைகளின் எண்ணிக்கை மிக அதிகமாக காணப்படுகிறது.
இதுகுறித்து உள்ளூர் மக்கள் கூறுகையில்:- டிசம்பர் , ஜனவரி மாதங்களில் பறவைகள் இங்கு வந்து கூடு கட்ட துவங்கும். எங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு பறவைகளை துன்புறுத்தக்கூடாது என்பதை கவனமாக போதித்து உள்ளோம். தவறி பறவைகள் கூடுகளில் இருந்து கீழே விழுந்து விட்டால் கூட அதனை எடுத்து அருகில் உள்ள வன அலுவலகத்தில் ஒப்படைத்து அதை காப்பாற்றும் முயற்சியில் குழந்தைகள் கூட ஈடுபடுகின்றனர். மற்ற மக்கள் பறவைகளை காண வெளிப்பகுதியில் இருந்து எங்கள் கிராமத்திற்கு வரும் நிலையில் வீடுகள் எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே வெளிநாட்டு பறவைகளை காண்பது மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சரணாலயத்தை மேம்படுத்தும் வகையில் கிராமத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த பறவைகளின் எச்சம் உள்ள குளத்து நீர் வயல் வெளிகளுக்கு பாய்வதால் விளைச்சல் அதிகமாக உள்ளது. ஒரு முறை மட்டுமே வருடத்திற்கு தண்ணீர் இந்த குளங்களுக்கு திறக்கப்படும் நிலையில் மணிமுத்தாறு அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பறவைகளை காப்பாற்றும் நோக்கில் எங்கள் குழந்தைகள் மற்றும் இங்குள்ள பெரியவர்கள், இளைஞர்கள் விசேஷ நாட்களில் கூட பட்டாசு வெடிப்பதில்லை. சரணாலயத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை வனத்துறையினர் எடுக்க வேண்டுமென அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu