சமூக ஆர்வலர்கள் மீது பொய் புகார்: போக்குவரத்துக் கழகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சமூக ஆர்வலர்கள் மீது பொய் புகார்: போக்குவரத்துக் கழகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
X

நாகர்கோவில் அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய பொதுமக்கள்.

நான்குநேரியில் சமூக ஆர்வலர்கள் மீது பொய் புகார் அளித்த அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லை மாவட்டம், நான்குநேரியில் சமூக ஆர்வலர்கள் மீது பொய் புகார் அளித்த நாகர்கோவில் அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

நான்குநேரியை புறக்கணித்து அரசு பஸ்கள் அனுமதியின்றி புறவழிச் சாலைகளில் தொடர்ந்து இயக்கப்படுவதால் பல்வேறு ஊர்களில் பொது மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என புகார்கள் எழுந்து வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு மண்டல போக்குவரத்து துணை இயக்குனர் நான்குநேரியில் மேற்கொண்ட ஆய்வில் இது உறுதிபடுத்தப்பட்டது.

ஆனாலும் தொடர்ந்து விதிகளை மீறி அரசு பஸ்கள் நான்குநேரி புற வழிச் சாலைகளில் இயக்கப்படுவது குறித்து நான்குநேரியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுப்பிரமணியன்(55) என்பவர் தொலைபேசி மூலம் நாகர்கோவில் அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் சுப்பிரமணியனிடம் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து கிளை மேலாளர் சுப்பிரமணியன் நாகர்கோவில் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் நான்குநேரியை சேர்ந்தவர்கள் தங்களை வேலை செய்ய விடாமல் தொலைபேசி மூலம் தொந்தரவு செய்வதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து நாகர்கோவில் வடசேரி போலீசார் இரு தரப்பையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மீது தொடர்ந்து புகார் அளித்து வருவதால் காழ்ப்புணர்ச்சியால் கிளை மேலாளர் சுப்பிரமணியன் நான்குநேரி சமூக ஆர்வலர் சுப்பிரமணியன் மீது ஆதாரமற்ற பொய்யான புகாரை அளித்துள்ளது தெரிந்தது. இதனையடுத்து போலீசார் இரு தரப்பையும் சமாதானமாக பேசி அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் சட்ட விரோதமாக அரசு பஸ் இயக்கப்படுவதை தடுக்கப் போராடும் சமூக ஆர்வலர்கள் மீது பொய் புகார் அளித்த நாகர்கோவில் கிளை மேலாளர் சுப்பிரமணியன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நான்குநேரியில் அனைத்து கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு. நான்குநேரி முன்னாள் எம்எல்ஏ., கிருஷ்ணன் தலைமை வகித்தார்.

அரசு வழங்கியுள்ள அனுமதியின் படி நெல்லை நாகர்கோவில் மார்க்கத்தில் அனைத்து பேருந்துகளை இயக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் கோஷமிட்டனர். மேலும் இதில் சரியான நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நான்குநேரி புறக்கணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக நிறுவனங்களுக்கு எதிராக வலுவான அளவில் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்