வாழை நார்ப் பொருட்கள் உற்பத்தி பொது சேவை மையம்:நெல்லை ஆட்சியர் திறப்பு
நெல்லை மாவட்டம், களக்காடு, பத்மநேரி பகுதிகளில் வாழை நார் மூலம் கைவினைப் பொருட்கள் உற்பத்தியினை மேம்படுத்துவதற்காக காதிகிராப்ட் சார்பில் பொது சேவை மைய கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு திறந்து வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தற்போது களக்காடு பகுதிகளில் அதிக அளவிலான பயிரிடப்பட்டு பெருமளவிலான வாழைப்பழங்கள் விளைவிக்கப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் வாழை பயிரிடுவதற்கு தகுந்த இடமாக களக்காடு பகுதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், நெல்லை மாவட்டத்தில் இரண்டாவதாக அதிக அளவில் வாழை நார் மூலம் கைவினைப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் இடமாகவும் களக்காடு பகுதி உள்ளது. கைவினைப் பொருட்கள் தொடர்பான உலகத்தரமான வடிவமைப்பாளர்கள் சென்னை, பெங்களூர், மும்பை போன்ற மாநகரங்களில் உள்ளனர். கொரோனா காலகட்டத்தில் எல்லா சேவைகளும் இணைய வழியாகவே நடைபெற்று வருகிறது.
எனவே இவர்களை இணைய வழியாக தொடர்பு கொண்டு நமக்குத் தேவையான மூலப்பொருட்களை வெளிநாடுகளிலிருந்து வரவழைத்துக் கொள்ளலாம். மாவட்ட நிர்வாகம், மாவட்ட கைவினை மைய அமைப்பு மற்றும் மகளிர் அமைப்பு மூலம் கைவினைப் பொருட்களை சந்தைப்படுத்துதல் மூலமாக இங்கு இருக்கின்ற அனைத்து பொருட்களையும் தரம் ஆய்வு செய்து அனுப்ப முடியும். சந்தைகளில் அதன் தரம் முக்கியமானது.
கைவினைப் பொருட்கள் நெல்லை, தூத்துக்குடியில் சந்தை படுத்தபடுவதில்லை. ஐரோப்பா, அமெரிக்கா, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் தான் இந்த பொருட்களுக்கான சந்தை உள்ளது. பல்வேறு தனியார் நிறுவனங்கள் இதனை செயல்படுத்தி வருகிறார்கள். நாம் எவ்வாறு அவர்களுடன் இணைந்து கைவினைப் பொருட்களை சந்தைப் படுத்த முடியுமோ அப்போது தான் நாம் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும்.
அதற்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு தயாராக உள்ளது. இதற்கான பணியாளர்கள் தயார்படுத்த பட்டுள்ளார்கள். மாவட்ட நிர்வாகம், கே வி சி தனியார் நிறுவனங்கள், கைவினை கலைஞர்கள் அனைவரும் இணைந்து உற்பத்தி செய்யப்படும் கைவினைப் பொருட்களை உலக தரத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். நெல்லை கைவினை மையம் மூலம் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், நாம் உற்பத்தி செய்யும் பொருட்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு ஏற்றுமதி செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் கே வி சி நிறுவனம் முயற்சி செய்கிறது. களக்காடு மார்க்கெட் இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் புகழ்பெற்ற பொருட்களாக மாற்ற முழு ஒத்துழைப்பு தமிழ்நாடு அரசு சார்பாகவும், மாவட்ட நிர்வாகம் சார்பாக மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், காதி கிராம தொழில் மைய தென்மண்டல உறுப்பினர் சேகர் ராவ், தென்மண்டல கதர் கிராம தொழில் மைய துணை தலைமை நிர்வாக பொறியாளர் பாண்டே, கோட்ட இயக்குனர் அசோகன், இயக்குனர் சுசிலா பாண்டியன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu