பனை தொழிலை அரசு ஊக்கப்படுத்த வேண்டும்: பனை விவசாயிகள் கோரிக்கை

நெல்லை, தென்காசி, ஆகிய மாவட்டங்கிளில் இருந்து அலங்காரபொருட்கள், பெட்டிகள் , பட்டாசு ஆகியவை தயாரிப்பதற்காக பனை ஓலைகள் கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கொரோனா தாக்கத்தால் தொழில் பாதிப்பு இருந்தாலும் பனை பொருட்களை பயன்படுத்த மக்கள் ஆர்வமாக உள்ள நிலையில் பனையேறும் தொழிலை இளைஞர்கள் மத்தியில் அரசாங்கம் ஊக்கப்படுத்தி நலிவடையும் தொழிலை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து செல்லவேண்டும் என பனை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் விவசாயத்திற்கு அடுத்த படியாக பனை ஏறும் தொழில் உள்ளது. பனை மரத்தின் ஒவ்வொரு பொருட்களும் மக்களுக்கு பயன்தரக்குடியதாகும் இந்த பகுதிகளில் சுமார் ஆயிர்த்திற்கு மேற்பட்டவர்கள் பனையேறும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் . நெல்லை மாவட்டத்தில் தருவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் பனை தொழில் அதிக அளவில் நடந்து வருகிறது. தற்போது பனைசீசன் தொடங்கி உள்ளதாகல் கோடை காலத்தில் பதநீர் இறக்கப்படும், இதற்காக மரத்தில் உள்ள ஓலைகள் கிழிக்கப்பட்டு வருகிறது.
வெட்டப்படும் ஓலைகள் அனைத்தும் பதப்படுத்தப்பட்டு ஓலையில் இருந்து அலங்காரப் பொருட்கள், ஓலைப்பெட்டிகள் உள்ளிட்ட நாம் பயன்படுத்தும் பொருட்கள், பட்டாசு ஆகியவைக்கு பயன்படுத்தப்படுகிறது. அதே போன்று பதநீரும் இறக்கப்பட்டு விற்பனை மற்றும் கருப்பட்டி காய்ச்சப்படுகிறது.
தருவை மற்றும் ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் வெட்டப்படும் பனை ஓலைகள் சேமிக்கப்பட்டு கேரள மாநிலத்திற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஐந்து ஓலைகள் ஒரு கட்டு என கணக்கிடப்பட்டு ஒரு கட்டு ஓலை 250 ரூபாய் முதல் 300 வரை விற்பனை செய்யப்படுகிறது. அங்கு பனை ஓலையில் இருந்து அலங்கார பொருட்கள் , நாரில் இருந்து கட்டில் , பாய் ஆகியவையும் , ஓலை பட்டாசு செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.
சீசன் தோறும் தொழில் நல்ல முறையில் நடந்தாலும் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் கொரோனா தாக்கத்தால் தொழில் பாதிப்பு அடைந்துள்ளது. ஆனாலும் நவீன காலத்திலும் பனை ஓலைகள், நார்களில் செய்த பொருட்கள், பதநீர், நுங்கு, கருப்பட்டி ஆகிய பனை பொருட்கள் மீது மக்களின் நாட்டம் அதிகரித்து வருகிறது. மக்கள் விரும்பும் நிலையில் தொழில் செய்வதற்கு ஆட்கள் இல்லா நிலை ஏற்பட்டுள்ளது. பாரம்பரியமாக தொழில் செய்பவர்களே செய்து வருகின்றனர்.
மக்கள் மத்தியில் பனை பொருட்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால் நலிவடைந்து கிடக்கும் இந்த தொழிலை, தென்னைமரம் வளர்ப்பிற்கு அரசாங்கம் எப்படி ஊக்கப்படுத்துகிறதோ, அதுபோன்று பனை ஏறும் தொழிலை இக்கால இளைஞர்களிடம் ஊக்கப்படுத்த வேண்டும், பனை தொழிலை மையமாக வைத்து இளம் தொழில் முனைவேர்களை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், அதோடு பனை விவசாயிகளையும் பாதுகாத்து நமது மாநிலத்தின் அரசு மரம் பனையாக இருக்கும் நிலையில் தொழிலை வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் என பனை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu