நெல்லையில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்
நெல்லை மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியது.
நெல்லை மாநகராட்சியில் 4 மண்டலங்களிலும் மழை நீர் தேங்கிய நிலையில் நெல்லை, மேலப்பாளையம், தாழையூத்து ஆகிய மண்டலங்களில் மழைநீர் முழுவதும் வடிந்துள்ளது.
ஆனால் பாளை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சில இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. இதற்கிடையே நெல்லை மாநகர பகுதிகளில் கடந்த சில நாட்களாக பொதுமக்களுக்கு காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பு ஏற்பட்டு காணப்படுகிறது.
குறிப்பாக பாளை மண்டலத்தில் 50-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் அறிகுறிகளுடன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 20-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து மாநகர பகுதி முழுவதும் சுகாதார பணிகளை துரிதப்படுத்த மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ ராவ் உத்தரவிட்டார்.
அதன்பேரில் சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள் 4 மண்டலங்களிலும் முகாமிட்டு காய்ச்சல் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இன்று வண்ணார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் கொசு மருத்து தெளிக்கப்பட்டது. மேலும் பாளை பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு அனைத்து இடங்களிலும் பிளீச்சிங் பவுடர் தெளிக்கும் பணிகளும் நடைபெறுகிறது.
இதேபோல் மாவட்டம் முழுவதும் சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் ராஜேந்திரன் தலைமையில் டெங்கு தடுப்புபணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நெல்லை மாநகர பகுதிகளில் டெங்கு அறிகுறி காணப்பட்டவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டு அங்கு அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் வள்ளியூர், நாங்குநேரி, திசையன்விளை, ராதாபுரம் அரசு மருத்துவமனைகளிலும், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் காய்ச்சல் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu