தாமிரபரணி நீர்நிலைகளை தூய்மைபடுத்துவது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம்
தாமிரபரணி நீர்நிலைகளை தூய்மைபடுத்துவது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம்
தாமிரபரணி ஆறு உட்பட நீர்நிலைகளை தூய்மை படுத்துவது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் இன்று நடைபெற்றது
திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தலைமையில், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் வி.சிவகிருஷ்ணமூர்த்தி முன்னிலையில், தாமிரபரணி ஆறு உட்பட நீர்நிலைகளை தூய்மை படுத்துவது தொடர்பாக,பல்வேறு தன்னார்வ அமைப்பினர்களுடனான கருத்து கேட்பு கூட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தின் ஜீவ நதியான தாமிரபரணி ஆறு பாபநாசத்தில் தொடங்கி தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரை சென்று கடலில் கலக்கிறது. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி உட்பட அதனைச் சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு பிரதான குடிநீருக்கு ஆதாரமாக விளங்கி வருகிறது. வற்றாத ஜீவ நதியான தாமிரபரணியை தூய்மைப்படுத்தி, மீட்டெடுப்பதற்காக கடந்த காலங்களில் தொண்டு நிறுவனங்களுடன் இனைந்து, மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.
அதனை மேலும் வலுபடுத்துவதற்காகவும், தாமிரபரணி தூய்மை படுத்துவதை ஒரு இயக்கமாக மாற்றி, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை முறையில் ஒரு அங்கமாக திகழ்வதற்கு நவீன மயமாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. நவீன தொழிட்நுட்பங்களை பயன்படுத்தி நீண்ட கால தொலைநோக்கு திட்டங்களை வகுத்து, செயல்படுத்துவதன் மூலம், தாமிரபரணி நதிநீரை மறு சீர்மைத்து புத்துயிர் அளித்து வரும் காலங்களில் பாதுகாத்து கொள்ள முடியும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி நதியை பாதுகாப்பதற்காக அனைத்து தொண்டு நிறுவனங்களும் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்து முறையாக திட்டமிட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த நதி சுற்றுவட்டாரப்பகுதியில் மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு உதவி வருகிறது. கடைசியாக கடலில் கலக்கிறது.
கல்லூரி மாணவ, மாணவிகள், பொது மக்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவர்கள் தாமிரபரணி ஆற்றின் கரை பகுதியினை பலப்படுத்துதல், முட்புதர்களை அகற்றுதல், அமலச்செடிகளை அகற்றுதல் உள்ளிட்ட தூய்மைப்பணிகள் மேற்கொள்ளவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு கேட்டுக்கொண்டார். மேலும், 60 க்கும் மேற்பட்ட தன்னார்வக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பது மற்றும் தூய்மைப்படுத்துவது குறித்து கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, கண்காணிப்பு பொறியாளர் நீர்வள ஆதார அமைப்பு ஞானசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார், துணை ஆட்சியர் பயிற்சி செல்வி மகாலெட்சுமி, மற்றும் அரசு அலுவலர்கள், 60 க்கும் மேற்பட்ட தன்னார்வக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu