தாமிரபரணி உபரிநீரை வறண்ட பகுதிகளுக்கு திருப்பிவிட முதல்வர் உத்தரவு
கன்னடியன் கால்வாய் - கோப்புப்படம்
தென் இலங்கை கடற்கரை ஒட்டிய வங்க கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.
அணைகள் நிரம்பினால் திறக்கப்படும் அணைக்கு வரும் உபரிநீர் வீணாக கடலில் சென்று கலக்கும். தாமிரபரணி ஆற்றிலிருந்து கடலில் உபரியாக கலக்கும் நீரை கருமேனியாறு மற்றும் நம்பியாறு நதிகளுடன் இணைக்கும் திட்டம் நான்கு நிலைகளாக செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டது. முதல் மூன்று நிலைகளுக்கான பணிகளும் முழுமையாக முடிக்கப்பட்டு நான்காவது நிலைப்பணிகளும் முடியும் தருவாயில் உள்ளன.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த மார்ச் 2008-ல் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அன்றைய தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி அறிவித்தபடி, தாமிரபரணி ஆற்றிலிருந்து கடலில் உபரியாக கலக்கும் 13,758 மில்லியன் கன அடி வெள்ளநீரில், கன்னடியன் (தாமிரபரணியின் 3-வது) அணைக்கட்டில் இருந்து 2765 மில்லியன் கன அடி நீரை கருமேனியாறு மற்றும் நம்பியாறு நதிகளுடன் இணைக்கும் திட்டத்திற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது.
இத்திட்டத்தை நான்கு நிலைகளாக செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டு, அன்றைய முதல்வர் கருணாநிதியால் 21.02.2009 அன்று இத்திட்டப் பணிகள் துவக்கி வைக்கப்பட்டன. கடந்த இரண்டு ஆண்டுகளில் இப்பணிகள் விரைவுபடுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டன. தற்போது, முதல் மூன்று நிலைகளுக்கான பணிகளும் முழுமையாக முடிக்கப்பட்டு நான்காவது நிலைப்பணிகளும் முடியும் தருவாயில் உள்ளன.
திருநெல்வேலி மாவட்டத்தில் 67.1 கி.மீ நீளத்திற்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் 8.10 கி.மீ நீளத்திற்கும், ஆக மொத்தம் 75.2 கி.மீட்டர் நீளத்திற்கு வெள்ளநீர்க் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தினால் 17,002 ஹெக்டேர் புதிய பாசனப் பரப்பு உட்பட 23,040 ஹெக்டேர் நிலங்கள் (56933 ஏக்கர்) பாசன வசதி பெறும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை, நாங்குநேரி, இராதாபுரம் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளும் பயன்பெறும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 32 கிராமங்கள், 177 குளங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 18 கிராமங்கள், 75 குளங்களும் பயன்பெறும்.
தற்போது வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து, தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, இத்திட்டத்தில் உபரிநீரை கொண்டு செல்வது குறித்து, நீர்வளத்துறை அமைச்சரிடமும் நீர்வளத்துறை அலுவலர்களுடனும், தமிழ்நாடு முதல்வர் கலந்தாலோசித்தார். இந்த ஆலோசனையின் போது எடுக்கப்பட்ட முடிவின்படி, கன்னடியன் வெள்ளப்பெருக்கு கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு சோதனை ஓட்டம் மேற்கொள்ள முதல்வர் ஆணையிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu