வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.6,000 நிவாரணம்
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்த பின்னர் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாவது:-
சென்னை மக்களைப்போல தென்மாவட்ட மக்களையும் அரசு காக்கும் என உறுதி தருகிறேன். வானிலை ஆய்வு மையம் அறிவித்ததை விட பல மடங்கு அதிக மழை தென்மாவட்டங்களில் பெய்துள்ளது. சில இடங்களில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்ததால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1801 ஆம் ஆண்டுக்கு பின் தற்போதுதான் அதிக மழை பெய்துள்ளது.
அமைச்சர்கள், அதிகாரிகள் களத்தில் பணி செய்து வருகின்றனர். 12,653 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் உணவு, மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக கூடுதல் ஹெலிகாப்டர்கள் அனுப்பு வைக்கப்பட்டன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி குடும்ப அட்டை தாரர்களுக்கு தலா ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படும். லேசான பாதிப்புகளுக்கு ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும். தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும்.
பாதிக்கப்பட்ட விவசாய நிலம் ஹெக்டேருக்கு ரூ.17,000 வழங்கப்படும். பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களுக்கு வழங்கும் நிவாரணம் ரூ.4 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், ஏரல் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பிரதமர் மோடியை சந்தித்து அடுத்தடுத்து இரண்டு பேரிடர்களில் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கு பேரிடர் மீட்பு நிதியிலிருந்து நிவாரணம் வழங்க கோரிக்கை வைத்துள்ளேன். சென்னைக்கு மட்டும் ரூ.1,500 கோடி நிதியை தமிழ்நாடு அரசு செலவு செய்துள்ளது.
அடிக்கடி டெல்லி செல்லும் ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டுக்கு தேவையான நிதியை பெற்றுத் தர வேண்டும். சென்னை வெள்ளம், தென் மாவட்ட வெள்ளம் ஆகியவற்றை தேசிய பேரிடராக மத்திய அரசு இன்னும் அறிவிக்கவில்லை; நிதியும் ஒதுக்கவில்லை என்று கூறினார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu