பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்: காத்திருப்போர் பட்டியலில் 3 காவல் ஆய்வாளர்கள்
ஏஎஸ்பி., பல்வீர் சிங் கோப்பு படம்.
திருநெல்வேலி: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவோரின் பற்களை பிடுங்கியதாக எழுந்த சர்ச்சையில் திருநெல்வேலி மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஏஎஸ்பி பல்வீர்சிங் பொறுப்பு வகித்தபோது, காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவோரின் பற்களை பிடுங்கி தண்டனை அளித்ததாக சர்ச்சை எழுந்தது. இதனைத் தொடர்ந்து ஏஎஸ்பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இவ்விவகாரம் தொடர்பாக சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமதுசபீர் ஆலம் விசாரணை நடத்தி வருகிறார். மாநில மனித உரிமை ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையே காவல்துறையில் பலரும் மாற்றப்பட்டு வருகின்றனர். விக்கிரமசிங்கபுரம் தனிப்பிரிவு தலைமைக் காவலர் போகபூமன், கல்லிடைக்குறிச்சி தலைமைக் காவலர் ராஜ்குமார் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
இதன் தொடர்ச்சியாக திருநெல்வேலி மாவட்ட உளவு பிரிவு இன்ஸ்பெக்டர் கோமதி சென்னை தலைமையிடத்துக்கும், அம்பாசமுத்திரம் சரக உளவுப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் காவல் நிலைய பணிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாநகர உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர் அதிசயராஜ் கூடுதல் பொறுப்பாக மாவட்ட உளவுப்பிரிவையும் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அம்பாசமுத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளர், மற்றும் விக்கிரமசிங்கபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu