புலிகள், வன விலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க கண்காணிப்பு அறை: காப்பக துணை இயக்குனர் தகவல்.
தமிழக, கேரள வன எல்லையில், நிரந்தர வேட்டை தடுப்புக்குழு அமைக்கப்படும் என்று களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பக அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குனராகப் பொறுப்பேற்றுக் கொண்ட செண்பகப்பிரியா தெரிவித்தார்.
அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழக, கேரள வன எல்லையில் நிரந்தரமாக வேட்டை தடுப்புக்குழுக்கள் அமைக்கப்படும். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் பகுதியில் விலங்கு வேட்டை மற்றும் மரக்கடத்தலை தடுக்கும் வகையில் தமிழகம், கேரள மாநில வன எல்லைகளில் நிரந்தரமாக வேட்டை தடுப்புக்குழுக்கள் அமைக்கப்படும்.
களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில், பரவலாக வளர்ந்துள்ள உண்ணி செடிகளை அகற்றி புல் வெளியாக மாற்றப்படும். இதன் மூலம், தாவர உண்ணி விலங்குகள் அதிகரிப்பதால் புலிகளின், எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும். புலிகள் எண்ணிக்கை மற்றும் வன விலங்குகள் கணக்கெடுப்பு ஆண்டு தோறும் நடைபெற்று வரும் நிலையில், புலிகள் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் கண்காணிப்பு அறை உருவாக்கப்படும்.
புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள கோவில்கள், அருவிகள், படகு சவாரி பகுதிகளை ஒருங்கிணைத்து, தனி வாகனம் மூலம் கண்டு களிக்கும், சுற்றுலா சூழல் ஏற்படுத்தப்படும். மனிதர், விலங்குகள் மோதலைக் கண்காணிக்கும் வகையிலும், கட்டுப்படுத்தும் வகையிலும், கட்டுப்பாட்டு அறை எண் தெரிவிக்கப்படும். இதன் மூலம், பொதுமக்கள் விலங்குகள் நடமாட்டம் உள்ளிட்டவை குறித்து உடனுக்குடன் நேரடியாகத் தகவல் தெரிவிக்கலாம்.
மேலும், விரைவுப் படை அமைக்கப்பட்டு அதன் மூலம் விலங்குகளால் ஏற்படும் இடையூறுகள் உடனடியாக சரிசெய்யப்படும். அரசின் உரிய உத்தரவு வந்தவுடன் பொதுமக்களுக்கு சுற்றுலாவிற்கு அனுமதிக்கப்படும் என்று தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu