விக்கிரமசிங்கபுரத்தில் பனை திருவிழா: சமுக ஆர்வலர்கள் பங்கேற்பு
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் பனை நண்பர்கள் இயக்கம் சார்பாக பனை பாதுகாப்பு விழா நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் பனை நண்பர்கள் இயக்கம் சார்பாக பனை பாதுகாப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பனை மரத்தின் பயன்கள் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும் பனை ஓலைகள் மூலம் செய்யப்பட்ட பனை மரம் ஏறுவது போல் ஆன பொருள்கள், பனை ஓலை கூடைகள், ஓலையால் செய்யப்பட்ட நாய் பொம்மைகள், கோவில் கோபுரங்கள், அழகு பொருட்கள் மற்றும் பல்வேறு வகையான பொருட்கள் ஓலைகளால் செய்யப்பட்டு காட்சிக்கு வைத்திருந்தனர்.
முக்கியமாக காமராஜர் தன் இரு கைகளால் பள்ளி குழந்தைகளை கூட்டி செல்வது போல் பனை ஓலையால் செய்யப்பட்ட உருவம் அனைவரையும் கவர்ந்தது. மேலும் இந்த விழாவில் பனைமரம் ஏறும் தொழிலாளர்கள் தாங்கள் பனைமரம் ஏறும் சாதனம் மற்றும் அவற்றைச் சார்ந்த பொருட்களுடன் வந்திருந்து பனையேறும் தொழிலையும், பனையையும் காக்க கோரிக்கை வைத்தனர்.
இந்த விழாவில் அரசுக்கு கள் இறக்க அனுமதி, முதல்வர் நாற்காலி பனை நாரால் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற கோரிக்கை உட்பட 16 கோரிக்கைகளை வைத்துள்ளனர். விழாவின் இறுதியில் பனை ஏறும் தொழிலாளிக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த விழாவில் ஹெர்போ கேர் மருத்துவமனை இயக்குனர் நவீன் பாலாஜி, திரைப்பட இயக்குனர் தாமரை செந்தூர் பாண்டி, வரலாற்று ஆய்வாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, பனைப் பித்தன் எம்.ஆர்.பாலாஜி, பனைப்புரட்சியாளர் சு.கோயில் பிச்சை பிரபாகர், பணனயோலை பித்தன் பால்பாண்டி, பனை ஓலை பொருட்கள் பயிற்சியாளர் கிரேஸ் ஜீலியட் டயானா, ஊருணி அறக்கட்டளை நிறுவனர் ரெத்தினவேல் ராஜன், சமக மாநில மகளிரணி துணைச் செயலாளர் சுபலதா அருட்பணி காட்சன் சாமுவேல், சமூக ஆர்வலர்கள் டாப் டிவி ராஜா மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பனை சார்ந்த ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu