வேண்டிய வரம் அருளும் கடையம் வில்வவனநாதர்
வில்வவனநாதர் திருக்கோயில், நெல்லை மாவட்டம் கடையம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள இறையவன் பெயர் வில்வவனநாதர், தாயார் நித்ய கல்யாணி. இங்குள்ள பீடத்தை தரணி பீடம் என்கிறார்கள்.
இங்குள்ள வில்வ மரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. பிரம்மதேவருக்கு சிவபெருமான் ஒரு வில்வபழத்தைக் கொடுத்தாராம் அதை மூன்றாக உடைத்த பிரம்மா ஒன்றை கைலாய மலையிலும், இன்னொன்றை பாரதத்தின் நடுவிலுள்ள மேருமலையிலும், மற்றொன்றை தென்பொதிகை சாரலிலுள்ள துவாத சாந்தவனத்திலும் நட்டார்.
அந்த துவாதசாந்தவனப் பகுதியில் இந்த கோவில் அமைந்துள்ளது. தேவர்கள் நீர் பாய்ச்சி இந்த மரத்தை வளர்த்தனர். இங்குள்ள வில்வ காய் உடைத்தால் உள்ளே சிவலிங்க பாணம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஸ்தலத்தை பற்றி காபிலோ புராணத்தில் வரலாறு சொல்லப்பட்டுள்ளது. தேவர்களுக்கும் கம்பாசுரன் என்பவனுக்கும் நிகழ்ந்த யுத்தத்தின் போது, தேவேந்திரனுக்கு உதவியாக அயோத்தியை ஆண்ட தசரத மகாராஜா சென்றார். அசுரர்கள் பலரைக் கொன்றார்.
இதனால் தனக்கு தோஷம் ஏற்பட்டிருக்கலாம் எனக்கருதிய அவர் அகத்தியரால் உருவாக்கப்பட்ட தத்துவசாரா நதியில் நீராடி தோஷம் நீங்கப்பெற்றார்.அந்த நதிக்கரையில் சுயம்புவாக எழுந்தருளியிருந்த வில்வவனநாதரை வணங்கினார்.அவரது அருளால், ஸ்ரீமன் நாராயணனே அவருக்கு புத்திரராகப் பிறந்தார்.
அயோத்தியில் ராமராஜ்யம் நன்றாக இருப்பதை கண்டு பொறமை கொண்ட சம்புகன், அங்கே அகால மரணம் ஏற்பட வேண்டும் என இறைவனை வேண்டி தவம் செய்தான். அவனை ராமபிரான் கொன்றுவிட்டார்.
அந்த தோஷம் நீங்குவதற்காக அவர் தத்துவசாரா நதியில் நீராடி, வில்வவனநாதரையும், அவரது தேவியான நித்ய கல்யாணி அம்பாளையும் வணங்கினார். ராமபிரான் நீராடிய பிறகு, இந்த நதிக்கு "ராம நதி' என்ற பெயர் ஏற்பட்டது. இப்போதும், இந்தப் பெயரிலேயே இந்த நதி ஓடிக்கொண்டிருக்கிறது
இங்கு ராமாயணத்தோடு தொடர்புடைய சிற்பங்கள் பல இங்குள்ளன.. மகாகவி பாரதியார் இக்கோயில் முன்பு உள்ள தட்டப்பாறையில் அமர்ந்து தான் "காணிநிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்' என்ற புகழ் பெற்ற பாடலை எழுதினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu