பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் - ஐஜி விசாரிக்க கோரிக்கை!
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கி சித்திரவதை செய்யப்பட்ட விவகாரத்தில் ஐஜி அந்தஸ்துடைய அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் உட்கோட்ட காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கி சித்திரவதை செய்யப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், அம்பை உதவி காவல் கண்காளிப்பாளர் பல்வீர்சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அப்போதைய காவல் கண்காணிப்பாளர் சரவணன் மற்றும் 3 காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகின்றது
சிபிசிஐடி காவலர்கள் நடத்தி வரும் விசாரணை மிகத் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விசாரணை அதிகாரியான ஆய்வாளர் உலகராணி அம்பாசமுத்திரம் உட்கோட்ட காவல் நிலையங்களில் விசாரணை நடத்தி வருகிறார். இதையடுத்து உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர்சிங் உட்பட சிலர் மீது 4 பிரிவுகளில் வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து விக்ரமசிங்கபுரம் காவல் நிலையத்திலும் கூடுதலாக ஒரு வழக்கு சேர்க்கப்பட்டுள்ளது. அதில் 17 வயது சிறுவனுக்கு பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அருண்குமார் என்பவர் அளித்த புகாரில், டிபிசிஐடி ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தினார். விசாரணையின் முடிவில் பல்வீர் சிங் உட்பட 3 பேர் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அருண்குமாரின் தந்தை கண்ணன், தாய் ராஜேஷ்வரி, பாதிக்கப்பட்ட சிறுவன் ஆகியோர் வழக்கறிஞர்களுடன் நெல்லையில் அமைந்துள்ள சிபிசிஐடி ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு வந்திருந்தார்கள். அவர்கள் 26 பக்கங்கள் அடங்கிய கோரிக்கை மனு ஒன்றை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கரிடம் வழங்கினார்கள்.
இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் பாண்டியராஜன் கூறியதாவது
அருண்குமார் விசாரணைக்கு வரவேண்டும் என 2 தினங்களுக்கு முன்னர்தான் சம்மன் வந்துள்ளது. அதனால் பெங்களூருவிலுள்ள அருண்குமார் நேரில் வர முடியவில்லை. இந்த வழக்கு தொடர்பாக சாட்சியங்கள் எதுவும் கொடுக்கவில்லை. தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதால் உரிய பாதுகாப்பு தரவேண்டும். IPS அதிகாரியும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதால் ஐஜி. அல்லது டிஐஜி அந்தஸ்தில் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரியின் மேற்பார்வையில் இந்த வழக்கு நடைபெறவேண்டும். அப்போதுதான் நேர்மையாக நடக்கும். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவேண்டும் என்பன உட்பட பல விசயங்களை எழுத்துப்பூர்வமாக மனுவாக கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu