இயக்குனர் பாலாவை விடுவித்தது நீதிமன்றம்: மேல்முறையீடு செய்ய ஜமீன் தரப்பு முடிவு
அவதூறு வழக்குதொடர்பாக அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தி் ஆஜராக வந்த திரைப்பட இயக்குநர் பாலா
அவன்-இவன் திரைப்படத்தில் சிங்கம்பட்டி ஜமீனையும் சொரிமுத்து அய்யனார் கோயிலையும் அவதூறாக சித்தரித்ததாக வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் படத்தின் இயக்குநர் பாலாவை விடுதலை செய்து அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதித்துறை நீதிமன்ற நடுவர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.
2011 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர்கள் ஆர்யா மற்றும் விஷால் நடித்து வெளியான அவன் இவன் திரைப்படத்தில் நெல்லை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சொரிமுத்தையனார் கோவில் மற்றும் சிங்கம்பட்டி சமஸ்தானத்தை அவதூறாக சித்தரித்து கருத்துகள் வெளியானதாக கூறி, கடந்த 2011ம் ஆண்டு சிங்கம்பட்டி இளைய ஜமீன்தார் சங்கராத்மஜன் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு விசாரணை அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் நடிகர் ஆர்யா, தயாரிப்பாளர் கல்பாத்தி ஆகியோர் வருத்தம் தெரிவித்ததால் இருவரும் வழக்கில் இருந்து ஏற்கனவே விடுவிக்கப்பட்டனர்.
இயக்குனர் பாலா தரப்பில் வழக்கறிஞர் முகமது உசேன் ஆஜராகி திரைப்படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் குறித்தும், சொரிமுத்தையனார் குறித்தும் எந்த தவறான கருத்துக்களும் பதிவு செய்யப்படவில்லை என பல்வேறு வாதங்களை எடுத்து வைத்தார். இந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி கார்த்திகேயன் இருதரப்பு வாதத்தையும் கேட்டறிந்தார்.
பின்னர் குற்றம் முறையாக நிரூபணம் செய்யப்படாததால் இயக்குனர் பாலாவை இந்த வழக்கிலிருந்து விடுவிப்பதாக உத்தரவிட்டார். பொய் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது மகிழ்ச்சி என இயக்குனர் பாலா தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த சிங்கம்பட்டி ஜமீன் தரப்பு வழக்கறிஞர் ரமேஷ், நீதிமன்ற ஆவணங்களை பெற்று கலந்தாலோசனை செய்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu