ஆவினில் நிர்வாக சீர்திருத்த நடவடிக்கை: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மனோ தங்கராஜ்.
தமிழக பால்வளத்துறை அமைச்சராக சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட மனோ தங்கராஜ் திருநெல்வேலி ரெட்டியார்பட்டி பகுதியில் உள்ள ஆவின் பால் உற்பத்தி நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆவின் பால் பொருட்கள் உற்பத்தி அதிகரிப்புக்கும், சந்தைபடுத்துதலுக்கும் நல்ல வாய்ப்பும், ஆவின் பால் பொருட்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பும் உள்ளது. நெல்லை ஆவினில் பால் கையாளும் திறனை 40 ஆயிரம் லிட்டரில் இருந்து 70 ஆயிரம் லிட்டராக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்துள்ளோம்.
இதற்காக நெல்லை ஆவின் பால் உற்பத்தி கூட்டுறவு சங்கங்களின் விவசாயிகள் தற்போது பராமரிப்பு செய்து வரும் கறவை மாடுகள் எண்ணிக்கையை 2 லட்சம் கறவை மாடுகளாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆவினில் பல நிர்வாக மாற்றங்களை செய்து வருகிறோம்.
ஆவின் பால் பொருட்கள் தரமான முறையில் சந்தையில் போட்டிகளை எதிர்கொள்ளும் வகையில் உற்பத்தி செய்யப்படும். தமிழகம் முழுவதும் ஆவின் விற்பனை நிலையங்கள் தனித்துவமான ஆவின் பொருட்கள் மட்டுமே விற்பனை நிலையங்களாக செயல்படும்.
பால் கொள்முதலை பெருக்குதல், கையாளும் திறனை அதிகப்படுத்துதல், புதிதாக ஆவின் பால் பொருட்கள் உற்பத்தி அலகுகள் அமைத்தல் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். தற்போது ஆவின் பால் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை. ஆவினை பொறுத்தவரை தரமான பால் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த கால ஆட்சியில் இருந்த மாதிரி இல்லாமல் ஒப்பந்த பணியாளர்களின் ஊதிய நிலுவைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும், அவர்களின் ஊதியம் நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
சமீபத்தில் ஆவின் நிர்வாக சீர்திருத்தத்திற்காக 12 நடைமுறைகளை வெளியிட்டுள்ளேன். ஆவின் பொதுத்துறை நிறுவனமாக இருந்தாலும் இது ஒரு வணிக நிறுவனம். லாபத்திற்கேற்ற வழிமுறைகளை கையாள்வது அவசியம்.
மேலும் 35 ஆயிரம் பணியாளர்களை கொண்ட நிறுவனம். ஆவினில் அனைத்து தரப்பு குறைகளை கேட்டு ஆய்வு செய்து சிறந்த சேவைகளை வழங்குவது தான் குறிக்கோள். நிர்வாகம் முறைப்படுத்துதல், தானியங்கி இயந்திரமயமாக்கல், விரிவாக்கம், பால் உற்பத்தி பெருக்குதல் ஆகிய இலக்குகளை கொண்டு செயல்படுகிறேன். இதன் பலன்களை 2 மாதங்களில் மக்கள் தெரிந்து கொள்வார்கள் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
பேட்டியின்போது, நெல்லை ஆவின் பொது மேலாளர் தியானேஷ் பாபு, துணை பதிவாளர் (பால் வளம்) சைமன் சார்லஸ், உதவி பொது மேலாளர் (நிதி) பிரதீப் குமார், துணை பொது மேலாளர் (உள்ளீட்டு உற்பத்தி) சரவணமுத்து, மேலாளர் (விற்பனை) அனுஷா சிங், துணை மேலாளர் (தரக்கட்டுப்பாடு) கவுசல்யா, தூத்துக்குடி ஆவின் பொது மேலாளர் ராஜா குமார், தூத்துக்குடி ஆவின் துணை பதிவாளர் (பால்பதம்) நவ்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu