வி.ஏ.ஓ. கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை: கனிமொழி எம்.பி. உறுதி
கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் குடும்பத்துக்கு கனிமொழி எம்.பி. ஆறுதல் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகேயுள்ள கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த லூர்து பிரான்சிஸ் இன்று மாலை அலுவலகத்தில் இருந்தபோது அரிவாளுடன் வந்த இருவரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்ததால் இந்த கொலை சம்பவம் நிகழ்ந்ததாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, முறப்பநாடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்ஸின் குடும்பத்தினரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், திருநெல்வேலி மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வஹாப் எம்.எல்.ஏ, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதுதொடர்பாக கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் பணியின் போது சமூகவிரோதிகளால் தாக்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. சமூகப் பொறுப்போடு, கடமை தவறாது பணியாற்றியவரின் மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu