டெங்கு ஒழிப்பு நடவடிக்கை - நெல்லை மாநகரில் வீடு வீடாக ஆய்வு

திருநெல்வேலி மாநகராட்சி உட்பட்ட பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு அவர்களின் வழிகாட்டுதலின்படி, ஆணையாளர் கண்ணன் அவர்களின் அறிவுரைப்படி, மாநகர பகுதிகளில் தீவிர டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஒவ்வொரு சனி கிழமை தோறும் 9 வார்டுகளாக பிரிக்கப்பட்டு தீவிர டெங்கு தடுப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தீவிர டெங்கு ஒழிப்பு நடவடிக்கையாக 20020 வீடுகளில் உள்ள தண்ணீர் நீர்தேக்க தொட்டி மற்றும் சுற்றுப்புறங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து சனிக்கிழையான இன்று 2, 10, 17, 19, 21, 32, 41, 48, 54 என 9 வார்டுகளில் ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வின்போது 25241 வீடுகளில் சுகாதாரப் பணியாளர்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் போது 200 வீடுகளில் லார்வா கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டு, பொது சுகாதார விதிகளின்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வார்டுகளில் வீடு, வீடாக சென்று காய்ச்சல் கண்டவர்கள் பற்றிய விபரங்கள் சேகரிக்கப்பட்டது. அவர்களில் 176 நபர்களுக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. 1568 நபர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் புகை இயந்திரம் மூலம் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. ஆக மொத்தம் கடந்த சனிக்கிழமையும், இன்றைய சனிக்கிழமையும் மொத்தம் 45261 குடியிருப்புகளில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த பணிகளை மாநகர நல அலுவலர் மரு. திருமதி. சரோஜா மற்றும் அந்தந்த மண்டல உதவி ஆணையாளர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் கண்காணிப்பு செய்தனர். மேலும் அந்தந்த பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவ அலுவலர்கள் மூலம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாமில் 513 களப் பணியாளர்கள் மற்றும் 450 தூய்மைப் பணியாளர்கள் பெயிண்ட் டப்பாக்கள், சிரட்டைகள், இளநீர் கூந்தல்கள் என சுமார் 4 டன் பொருட்கள் அகற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த டெங்கு ஒழிப்பு தடுப்பு நடவடிக்கை பணி தீவிரப்படுத்தப்படும் என திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் ஜி.கண்ணன் தெரிவித்துள்ளார் .

Next Story
ai in future agriculture