ஸ்ரீராஜா கோபால சுவாமி குலசேகர ஆழ்வார் திருக்கோவில்
திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் அருகே உள்ளது ஸ்ரீராஜாகோபால சுவாமி குலசேகர ஆழ்வார் திருக்கோவில். ஒருபுறம் தாமிரபரணியும், மறுபுறம் கடனா நதியும் சூழ மத்தியில் இயற்கை எழில் மிகுந்த பசுமை வளத்துடன் எழிலாக விளங்குகின்றது.
இந்த திருக்கோவிலில் காண்பதற்கு அரிய அஷ்டாங்க விமானத்தின் கீழ் ஸ்ரீமன் வேத நாராயணன் நின்ற இருந்த, சயன திருக்கோலங்களில் காட்சியளிக்கிறார். பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு மன்னர்களால் திருப்பணிகள் செய்யப்பட்டு கம்பீரமாக விளங்கும் இந்த கோவில் என்று தோன்றியது என கணக்கிட்டு சொல்ல முடியாத தொன்மையுடையது.
மன்னார் கோவில் பெயர் காரணம் :
நெடியானே வேங்கடவா நின்கோயிலின் வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே
என திருப்பதி திருமலையில் படியாக கிடந்தாயினும் உன்னை கண்டு தரிசிப்பேன் என்று பாடிய குலசேகர ஆழ்வார், திருமலை வேங்கடவன் மீது அன்பால் பாடல்கள் பல பாடி தொழுத இவர் இறுதி காலத்தில் இத்தலத்தில் இறைவனை வழிபட்டு முக்தியடைந்தார். அவருடைய திருவரசு ( ஜீவசமாதி ) இத் திருக்கோவிலின் உள்ளே தனி சன்னதியாக "குலசேகர ஆழ்வார் சன்னதியாக விளங்குகின்றது. குலசேகர ஆழ்வார் வழிபட்ட ராமன் , சீதா , லட்சுமணன் அர்த்த மண்டபத்தில் அருள்கின்றனர்.
9 ம் நூற்றாண்டில் தென் பகுதியை ஆண்ட சேர பேரரசனாக விளங்கிய குலசேகரன், முடி சூடிய அரச பதவி வேண்டாம் பெருமாள் அடித்தொழும் பாக்கியமே வேண்டும் என்று வேண்டி அரச பதவியை துறந்து இறைபணி செய்து பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராக திகழ்ந்தார்.
குலசேகர மன்னன் திருப்பணிகள் பல செய்து வந்ததால் அவரையும் ராஜகோபாலனையும் தொடர்ப்பு படுத்தி மன்னனார் கோவில் என்று அழைக்கப்பட்டது. பின்னர் மன்னார் கோவில் என்று இவ்வூர் வழங்கப்படுகிறது.
ஆலயம் தோன்றிய வரலாறு :
சப்த ரிஷிகளில் ஒருவரும் பிரஜாபதிகளில் முக்கியவருமான பிருகு மகரிஷி தட்ச பிரஜாபதியின் மகளான கியாதியை மணந்தார். இவருடைய மனைவி கியாதி அசுரர்க்கு அடைக்கலம் கொடுத்ததால் அவளை மகாவிஷ்ணு சக்ராயுதத்தால் அவளது தலையை அரிந்தார். அதனால் கோபித்த பிருகு, 'நான் மனைவியை இழந்து தவிப்பது போல இந்த பரந்தாமனும் பூமியில் பிறந்து மனைவியை இழந்து தவிக்கட்டும் என சாபமிடுகிறார்.
சினம் ஆறிய பிருகு மகரிஷி பரந்தாமனை சபித்து விட்டதை நினைத்து மனம் வருந்தி தவம் மேற்கொள்கிறார். மகரிஷியின் வாக்கு பொய்க்க கூடாது என்று சாபத்தை ஏற்றுக்கொண்டு, அதன்படி ராமாவதாரத்தில் சீதையை பிரிந்து துயருறுகின்றார். பின்னர் ராவண வதம் செய்து சீதையை மீட்ட பிறகு, தவம் மேற்கொண்ட பிருகு வேண்டிய படி அவருக்கு காட்சியருள்கிறார்.
அந்த பொதிகை மலை சாரலிலே வேத நாராயணன் மற்றும் தாயார் ஸ்ரீ தேவி, பூதேவி ஆகியோரை பிரதிஷ்டை செய்து வழிபடுகிறார். பிருகு மகரிஷி தன் கொள்ளு பேரனான மார்கண்டேயனுடன் இத்தலத்திலேயே வேதங்கள் ஓதி வழிபட்டு வாழ்கிறார். இதனால் வேதபுரி என்று இந்த இடம் வழங்கப்பட்டது. இக் கோவிலில் மூலவர் வேத நாராயணனுக்கு அருகிலேயே பிருகுவும், மார்கண்டேய மகரிஷியும் இருப்பதை காணலாம். இங்கு மூலவர் சுதை வடிவில் வர்ணகலாபத்துடன் விளங்குகிறார். எனவே மூலவருக்கு திருமஞ்சனம் (அபிசேகம்) கிடையாது. உற்சவ மூர்த்திக்கே அபிசேகம் செய்யப்படும்.
ஆலய சன்னதிகள் :
உற்சவ மூர்த்தியான ஸ்ரீ ராஜகோபால சுவாமிக்கு அருகில் கருடாழ்வார் மற்றும் ஆண்டாள் ஸ்ரீ வில்லிபுத்தூரில் இருப்பதை போல காட்சியளிப்பது சிறப்பு.
ஆலயத்தில் தனிக் கோவிலாக வேதவல்லி தாயாரும், புவன வல்லி தாயாரும் அருள் பாலிக்கின்றனர். அருகில் யோக நரசிம்மர் சன்னதியும், தசாவதார சன்னதியும் உள்ளது. ஸ்ரீ புவனவல்லி தாயார் சன்னதிக்கு அருகில் பரமபத வாசல் உள்ளது.
காட்டு மன்னார், கண்ணன், சக்கரத்தாழ்வார், பன்னிரு ஆழ்வார்கள், ராமானுஜர், மாணவாள மாமுனிகள் அனைவரும் ஆலயத்தில் பிரகாரத்தில் அருள்கின்றனர்.
கோவில் பந்தல் மண்டபத்தில் முத்துகிருஷ்ண நாயக்கர் சிலையும், அவருடைய தளவாய் ராமப் பய்யனுடைய சிலையும் உள்ளது. பாண்டியர்களுடைய மீன் சின்னமும் மண்டப முகட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. ஆலய சிற்பங்களும், கட்டுமான கலைச் சிற்பங்களும் வியக்க வைக்கும் அழகுடன் உள்ளது.
ஸ்தல சிறப்புகள்
ராமாயண காலத்தில் விபீஷ்ணரால் இங்கு மங்களா சாசனம் செய்யப்பட்டது.
ராமானுஜருக்கு குருவாய் விளங்கிய பெரிய நம்பிகளினுடைய வம்ச பரம்பரையினர் சுமார் 900 ஆண்டுகளாக இந்த ஆலயத்திற்கு இறைப் பணிகள் செய்து வருகின்றனர். குலசேகர ஆழ்வார் சன்னதியில் உள்ள கல்வெட்டு இதைப்பற்றி குறிப்பிடுகிறது.
பன்னிரு ஆழ்வார்கள் அருளிய நாலாயிர திவ்ய பிரபந்தத்திற்கு உரை எழுதிய வாதி கேசரி ஸ்ரீ அழகிய மணவாளா ஜீயர் அவதரித்ததும் இந்த தலத்தில்தான்.
தஞ்சை பெரிய கோவிலை தந்த இராஜராஜசோழன் மகன் ராஜேந்திர சோழனால் 1024 ல் இத் திருக்கோவிலுக்கு பல சுற்று சுவர்கள் கட்டப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்டது. இதனால் ராஜேந்திர விண்ணகர் என சிறப்பிக்கப்பட்டது. அதன் பின்னர் வந்த நாயக்க மன்னர்களாலும் திருப்பணிகள் செய்யப்பட்டு வெளிப்பிரகார சுவர்கள் கட்டப்பட்டது.
அம்பாசமுத்திரத்தில் பேருந்துநிலையத்தில் இருந்து இந்த கோவிலுக்கு செல்ல மினிபஸ் வசதிகள் அடிக்கடி உண்டு.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu